தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்காக 24 மணி நேரமும் உதவும் வகையில் ஹெல்ப் லைன் வசதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், துணை காவல் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் அறிவுரையின்பேரில், காவல் ஆய்வாளர் ஆடிவேல் அறிமுகப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் ஆடிவேல் மேலும் கூறும்போது, “தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான தென்காசி, குத்துக்கல்வசசை, அய்யாபுரம், வேதம்புதூர், அழகப்பபுரம், கீழப்புலியூர், சிந்தாமணி பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காகக் கூட வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கும் வகையில் இந்த உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக, 9943318742, 9345504458, 8754953113 ஆகிய 3 தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். தொலைபேசி அழைப்பை ஏற்று, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய 50 தன்னார்வலர்கள் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்டோருக்கு மருந்து, மாத்திரைகள் தேவைப்பட்டால் 24 மணி நேரமும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த எண்களில் தொடர்புகொள்ளலாம். மருந்துக் கடைகளில் இருந்து மருத்துகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கே வந்து கொடுப்பார்கள்.
அது மட்டுமின்றி மளிகைப் பொருட்கள், இறைச்சி, காய்கறிகள் ஆகியவை தேவையெனில் அரசு நிர்ணயித்துள்ள காலை 6 மணி முதல் மதியம் 1 மணிக்குள் தொடர்புகொண்டால் நேரடியாக வீட்டுக்கு வந்து பொருட்கள் பட்டியலை பெற்றுக்கொண்டு, அவற்றை வாங்கிக்கொண்டு வந்து கொடுப்பார்கள்.
யாருக்கேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவை இருந்தால் வாகன வசதி செய்யப்படும். இவற்றுக்கு உரிய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். வேறு எந்த கமிஷனும் செலுத்த வேண்டியதில்லை. மேலும், சில நோய்களுக்கு வீட்டுக்கு வந்து மருத்துவம் செய்ய சில மருத்துவர்கள் சிலருடன் பேசி வருகிறோம்.
இதற்கு மருத்துவர்கள் முன்வந்தால், வீட்டுக்கே வந்து மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் வீட்டிலேயே இருப்பது நல்லது. அதற்காக பொதுமக்களுக்கு வீடு தேடி வந்து உதவ இந்த முயற்சியை எடுத்துள்ளோம்” என்றார்.
தென்காசி காவல் ஆய்வாளரின் இந்த முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.