திருட்டு நடந்த மதுபானக் கடை. 
தமிழகம்

கோயம்பேடு டாஸ்மாக் கடையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு: சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை கோயம்பேட்டில் ஊரடங்கு காரணமாக பூட்டப்பட்டிருந்த மதுபானக்கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சரக்குகளைத் திருடிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுக்கடைகள் பூட்டப்பட்டதைப் பயன்படுத்திக்கொள்ளும் சமூக விரோதிகள் மதுபானங்களை 10 மடங்கு அதிக விலைக்கு விற்று வருகின்றனர். ஒரு குவார்ட்டர் ரூ.1000 வரை விற்க்கப்படுகிறது. மதுவுக்கு அடிமையான சிலர் வேறு வழியில்லாமல் வாங்கிக் குடிக்கின்றனர். சிலர் மது கிடைக்காத விரக்தியில் கிருமிநாசினி, ஷேவிங் லோஷன் உள்ளிட்டவற்றைக் குடித்து உயிரிழந்தனர்.

மதுபானப் பிரியர்களின் இந்தத் தேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் சமூக விரோதிகள் மதுக்கடைகளை உடைத்து மதுபானங்களைத் திருடும் வேலையைச் செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இவ்வாறு மதுபானக்கடைகள் உடைக்கப்படுவதால் அங்குள்ள மதுபானங்களை அப்புறப்படுத்தும் வேலையையும் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் செய்து வருகிறது.

கோயம்பேடு ரயில் நகர் பகுதியில் அரசு மதுபானக்கடை அமைந்துள்ளது. இந்த மதுபானக்கடை கடந்த 6-ம் தேதி அரசின் உத்தரவுப்படி பூட்டப்பட்டது. கடையை ஊழியர்கள் பூட்டிவிட்டுச் சென்ற நிலையில் அங்கு போலீஸார் ரோந்து செல்லும்போது கண்காணிக்கும் பணியைச் செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் கோயம்பேடு காவல் நிலைய ரோந்து போலீஸார் தலைமைக் காவலர் அலெக்சாண்டர், வாகன ஓட்டுநர் ஆயுதப்படை காவலர் ராஜேஷ் ஆகியோர் மேற்படி அரசு மதுபானக் கடையின் பட்டா புத்தகத்தில் கையெழுத்திட வந்தபோது கடையின் வெளியே மதுபான பாட்டில்கள் அடங்கிய ஏழு பெட்டிகள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இருட்டில் அக்கம்பக்கம் சுற்றிப் பார்த்ததில் யாரும் தென்படாததால் உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்கள். உடனடியாக சம்பவ இடத்துக்கு உதவி ஆட்சியர் ஜெயந்தி, கோயம்பேடு, சிஎம்பிடி காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

கடையின் சூப்பர்வைசர் துரைராஜ், பணியாளர்கள் துரைமுருகன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் வரவழைக்கப்பட்டு திருட்டுப்போன மதுபானங்கள் மதிப்புக் கணக்கிடப்பட்டு வருகிறது. ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் திருடு போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்டங்களில் நடந்த திருட்டு தற்போது தலைநகர் சென்னையிலும் நடந்துள்ளது போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT