மதுரை மாநகராட்சியில் ‘கரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாநகராட்சியின் சார்பில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறுகையில், ‘‘மதுரை மாநகராட்சியில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் மேலமடை, நரிமேடு தபால்தந்தி நகர் மற்றும் மகபூப்பாளையம் ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர்.
மற்றவர்களுக்கு இந்த கொரோனா தொற்று வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், இப்பகுதிகள்கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதிகளை சுற்றி 1 கிலோ மீட்டர் அளவிற்கு பொதுமக்கள் வெளியே செல்லாதவாறும், வெளிநபர்கள் உள்ளே வராதவாறும் பாதுகாப்பு தடுப்பு வளையம் அமைக்கப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ளது.
இப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் வெளியில் வந்து பொருட்கள் வாங்குவதை தவிர்க்கும் வகையில் பொதுமக்களின் நலனுக்காக வீட்டிற்குத் தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அந்தந்த பகுதிகளில் செயல்படும் கடைகளின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் துண்டு பிரசுரங்கள் அச்சிடப்பட்டு ஒவ்வொரு வீடாக மாநகராட்சிப் பணியாளர்கள் வழங்கி வருகின்றனர்.
மேலும், மாநகராட்சியின் மலிவு விலை காய்கறிகள் தொகுப்பு ‘பை’ அடங்கிய நடமாடும் காய்கறி வாகனங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் மூன்று வாகனங்கள் என மொத்தம் 12 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு பாதுகாப்பு உடைக்கவசம் அணிந்து விற்பனைக்கு செல்கின்றனர்.
இப் பணிகளையும் ஒருங்கிணைத்து கண்காணிக்க மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வதற்காக 2 உதவி செயற்பொறியாளர்கள் (திட்டம்), 2 நிர்வாக அலுவலர்கள் தலைமையில் தலா 10 நபர்கள் அடங்கிய 4 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
மேலும்,இப்பகுதிகளில் பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு பகுதிக்கும் தெரு வாரியாக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பகுதிகளான மேலமடை, தாசில்தார் நகர், நரிமேடு, மகபூப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் 530 நபர்கள் அடங்கிய காய்ச்சல் கண்டறியும் குழு அமைக்கப் பட்டு வீடு வீடாக ஆய்வு செய்யப்பட்டு வருவதுடன் 250 கைத்தெளிப்பான் மூலமும், 4 பூம் ஸ்பிரே வாகனங்கள் மூலமும், 36 பவர் ஸ்பிரே மூலமும், 8 ஜெட் ராடர் வாகனங்கள் மூலமும், 1 நவீன ட்ரோன் மூலமும் தினந்தோறும் காலை, மாலை என இரண்டு வேளைகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த அனைத்துப் பணிகளும் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது, ’’ என்றார்.