திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தங்கவைக்கப்பட்டுள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் மாற்று உடை இன்றித் தவித்துவந்த நிலையில், தன்னார்வலர்கள் சார்பில் அவர்களுக்குப் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 21 குடும்பத்தைச் சேர்ந்த 120 தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் செல்ல முடியாமல் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 51 குழந்தைகளும் உள்ளனர்.
இவர்களுக்குத் தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கி பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து செய்து வருகின்றனர். இவர்களுக்கு உணவு, தண்ணீர், பால் உள்ளிட்டவை கிடைத்து வரும் நிலையில் குழந்தைகள் அனைவரும் போதிய ஆடைகளின்றி பழைய ஆடைகளையே அணிந்து வந்தனர். இதனையறிந்து, மன்னார்குடி ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், மன்னார்குடி தொழிலதிபர் பிரதாப் சந்த், கியான் சந்த், சுனில் லுங்கட், அரவிந்த் குமார் ஆகியோர் ஒன்றிணைந்து அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான புத்தாடைகளை வழங்கினர்.
மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பகவதி சரணம் ரெட் கிராஸ் சொசைட்டி அமைப்பினருடன் இணைந்து புத்தாடைகளை வழங்கினார். இதில் தனியார் வானிலை ஆய்வாளர் ஆசிரியர் செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.