தமிழகம்

ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 1.35 லட்சம் பேர் கைது; 1 லட்சம் வாகனங்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 1 லட்சத்து 6 ஆயிரத்து 539 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் தொற்றுபரவலைத் தடுக்கும் வகையில்,தனிமைப்படுத்துதல் மற்றும்சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. போலீஸாரும் தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும், தடை உத்தரவை மீறி வெளியிடங்களில் அவசியமின்றி சுற்றுதல், கூட்டம் கூடுதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என தொடர்ந்து போலீஸார் எச்சரித்து வருகின்றனர்.

எச்சரிக்கையை மீறி வாகனங்களில் அவசியமின்றி சுற்றுபவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதன்படி, தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றித் திரிந்ததாக தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 25 ஆயிரத்து 708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக 1 லட்சத்து 35 ஆயிரத்து 734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதேபோல் 1 லட்சத்து 6 ஆயிரத்து 539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 45 லட்சத்து 13ஆயிரத்து 544 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 144 தடை உத்தரவை மீறியதாக நேற்று காலை 6 மணிவரை கடந்த 24 மணி நேரத்தில் 960 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இதில் தொடர்புடைய 427 இருசக்கர வாகனங்கள், 46 இலகுரக வாகனங்கள், மற்றும் 41 இதர வாகனங்கள் என மொத்தம் 514 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT