தமிழகம்

ரூ.10 ஆயிரத்தில் வெண்டிலேட்டர் தயாரித்து வருகிறது ரயில்வே: எஸ்ஆர்எம்யு கண்ணையா தகவல்

செய்திப்பிரிவு

ரூ.13 லட்சம் மதிப்புள்ள வெண்டிலேட்டர்களை ரூ.10 ஆயிரத்தில் ரயில்வேதயாரித்து வருகிறது என எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ரயில்வே தனது பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.பழைய பெட்டிகளை படுக்கை வசதி கொண்ட தனி வார்டுகளாக மாற்றம், முகக்கவசங்கள், கை கழுவும் திரவங்கள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

தினமும் சரக்கு ரயில்கள் இயக்கம்

ஐஆர்சிடிசி மூலம் சாலையோரமக்களுக்கு இலவசமாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க போதிய அளவில் சரக்கு ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.

கபுர்தலா ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட வெண்டிலேட்டர்களுக்கு ரயில்வே ஆராய்ச்சிக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையே, இந்திய மருத்துவ ஆராய்ச்சிநிறுவனத்தின் (ஐசிஎம்ஆா்) ஒப்புதலுக்கும் அனுப்பியுள்ளது. இதற்கான ஒப்புதல்கிடைத்தவுடன், ‘ஜீவன்’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த வெண்டிலேட்டர்கள் குறைந்த செலவில் தயாரிக்கப்படும்.

குறைந்த செலவில் தயாரிப்பு

அதாவது ரூ.13 லட்சம் மதிப்புள்ள வெண்டிலேட்டர்கள் ரூ.10 ஆயிரம் செலவில் தயாரிக்கப்படும். மேலும் பல்வேறு இடங்களில் உள்ள தொழிற்சாலைகளிலும் இதுபோன்ற வெண்டிலேட்டர்களைத் தயாரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இவ்வாறு கண்ணையா கூறினார்.

SCROLL FOR NEXT