தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூரில் சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் மற்றும் காய்கறி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு 153 சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள், காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்கினார்.
நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், வட்டாட்சியர் ரகு, சுகாதாரத்துறை துணை இயக்குநர் அனிதா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி, கூட்டுறவு சங்க தலைவர் பெரிய மோகன் என்ற மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் 22 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுடன் தொடர்புடைய சுமார் 250 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கரோனா பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த நேரத்தில் சுகாதார பணியாளர்களின் பணியை பாராட்ட வேண்டும். மக்களை காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகள், 2 நகராட்சிகள், ஒரு மாநகராட்சியில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு, எங்களது சொந்த பொறுப்பில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வழங்கி வருகிறோம்.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நாளை (இன்று) சுமார் ரூ.60 லட்சம் மதிப்பிலான கரோனா வைரஸ் பரிசோதனை செய்யக்கூடிய ஆய்வகம் (RT - PCR) தொடங்கி வைக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட முழுவதிலும் இருந்து சுமார் ரூ.60 லட்சம் வரை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. நிதி வழங்கியவர்களுக்கு நன்றி.
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக விலகலை மக்கள் கடைபிடித்த காரணத்தால் தான் கரோனா பாதிப்பு என்பது இந்தளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கரோனா வைரஸ் பாதித்த 22 பேரில் 18 பேர் வரை டெல்லியில் நடந்த மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள். மீதமுள்ள 4 பேர் ஒரு மருத்துவமனையில் இருந்தவர்கள்.
இவர்களும், டெல்லி சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தான். சமூக பரவல் மூலம் வந்தால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்.
ஆனால், சமூக விலகலை அரசும், மாவட்ட நிர்வாகமும் முறையாக கடைபிடித்து வருகிறது. மக்களும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். அதே போல், தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் பணி தீவிரமாக உள்ளது. இதனால் சமூக பரவல் தடுக்கப்பட்டுள்ளது, என்றார் அவர்.