டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டு அல்லலுறும் தமிழக முஸ்லிம்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அளிக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (ஏப்.10) வெளியிட்ட அறிக்கையில், "டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்ற தமிழக முஸ்லிம்கள் சிலர் அங்குள்ள மருத்துவமனைகளிலும், சிலர் மாணவர் விடுதிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலருக்கு சோதனைகள் செய்யப்பட்டு நோய்த்தொற்று இல்லை என்று சான்று அளிக்கப்பட்டிருக்கிறது. தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களும் சரி, நோய்த்தொற்று இல்லை என்று சான்றளிக்கப்பட்டவர்களும் சரி, எவருக்குமே போதிய உணவு, மாற்று உடை முதலானவை இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
நோய்த்தொற்று இல்லை என்று சான்றளிக்கப்பட்டவர்களிடம் இனிமேல் நீங்கள் மருத்துவமனையில் தங்க முடியாது; தனிமைப்படுத்தப்பட்டவர்களோடும் இருக்க முடியாது; தங்குவதற்கான ஏற்பாட்டை நீங்களே செய்துகொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், பிஹார் மாநிலத்திலிருந்து வந்து மாநாட்டில் பங்கேற்று தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் அனைவருக்கும் பிஹார் மாநில அரசு உரிய வசதிகளைச் செய்து தந்துள்ளது. அதேபோல, மருத்துவமனையிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்குப் போதிய உணவு, உடை முதலான தேவைகள் மற்றும் பிற வசதிகளை தமிழக அரசு பொறுப்பேற்று செய்து தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
நோய்த்தொற்று இல்லை என்று சான்றளிக்கப்பட்டவர்களும் தொடர்ந்து 14 நாட்கள் தனியே தங்கி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கும் அங்கேயே தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளைச் செய்து தர வேண்டுமென்று தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.