மலைவாழ் மக்கள் நகர்ப்பகுதிக்கு வருவதைத் தடுக்க வனப்பகுதியிலே அவர்களுக்கான பொருட்கள் டோர் டெலிவரி முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.
தேனி மாவட்டம் போடி அருகே சிறைகாடு, சோலையூர், முதுவாக்குடி, வருசநாடு அருகே கரட்டுப்பட்டி, லோயர்கேம்ப் அருகே பளியன்குடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன.
இங்கு பழங்குடியின மலைவாழ் மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். கிழங்கு, தேன், மருத்துவகுணம் கொண்ட வேர், மூலிகைச் செடிகளை எடுத்து வந்து நகர்ப்பகுதியில் விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவினால் இவர்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கவில்லை. எனவே அருகில் உள்ள நகர்ப்பகுதிகளுக்கு அலைந்து திரிந்து வருகின்றனர்.
எனவே இவர்களுக்கு வனப்பகுதியிலே உரிய பொருள்களை வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி பல்வேறு அமைப்புகள், அரசு நிறுவனங்கள் சார்பில் பொருட்கள் நேரடியாகச் சென்று வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்படி போடி அருகே சிறைகாடு, சோலையூர் பகுதிகளைச் சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. சோப்பு, காய்கறி, பருப்பு, அரிசி உள்ளிட்ட பொருட்கள் கொண்ட தொகுப்புப் பை அளிக்கப்பட்டன.
குழந்தைகள் நலக்குழுத் தலைவர் எஸ்எம்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் சி.நாகேந்திரன், எஸ்.பழனிச்சாமி, எஸ்.சந்திரசேகரன் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண்தேஜஸ்வி, நக்சல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ந.சண்முகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பழங்குடியின குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும் அத்தியாவசியத் தேவைக்காக நகர்ப்பகுதிக்கு வர வேண்டாம். தங்களைத் தொடர்பு கொண்டால் உரிய பொருட்களை கொண்டு வந்து தருகிறோம் என்று தெரிவித்தனர்.
இதே போல் மாவட்டத்தில் உள்ள மலைவாழ் கிராம மக்களுக்கும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பொருட்கள் நேரடியாகச் சென்று வழங்கப்பட்டு வருகிறது.