வாகனங்கள் மூலம் வாழைத்தார்கள் விற்பனை. 
தமிழகம்

பாபநாசத்தில் மரங்களிலேயே பழுத்து வீணாகும் வாழை; நடமாடும் வாகனங்கள் மூலம் வாழைத்தார்கள் விற்பனை

வி.சுந்தர்ராஜ்

வாழை மரங்களிலேயே வாழைத்தார்கள் பழுத்து வீணாகி வருவதால், தோட்டக்கலைத்துறை மூலம் நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாரத்தில் பாபநாசம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளனர்.

இவர்கள் அறுவடை செய்யும் வாழைத்தார்களை தஞ்சாவூர், கும்பகோணம், திருவையாறு, அய்யம்பேட்டை, திருவாரூர் ஆகிய ஊர்களில் உள்ள ஏலக்கடைகளுக்கும், மார்க்கெட்டுகளுக்கும் விற்பனைக்குக் கொண்டு செல்வார்கள்.

இந்நிலையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் அறுவடை செய்த வாழைத்தார்களை விற்பனைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அறுவடை செய்ய முடியாமல் வாழைத்தார்கள் மரத்திலேயே பழுத்துப் போனதைக் கண்டு விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இந்நிலையில், தோட்டக்கலைத்துறை உதவியுடன், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் விவசாயிகளுடன் இணைந்து வாழைத்தார்களை நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் திட்டம் இன்று (ஏப்.10) தொடங்கப்பட்டது.

இதையடுத்து, அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம் கிராமத்தில் இந்த நடமாடும் வாழைத்தார் விற்பனை வாகனத்தை தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெ.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, "விவசாயிகள் அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ள வாழைத்தார்களை தோட்டக்கலைத்துறை உதவியுடன் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யவும், அண்டை மாநில விற்பனை வாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்வதற்கும் பாபநாசம் தோட்டக்கலை துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்,

மரத்திலேயே வாழைப்பழங்கள் வீணாவதைத் தடுக்க விவசாயிகளே வாகனங்கள் மூலம் விற்பனை செய்து ஓரளவு வருமானத்தைப் பெற முடியும். தற்போது ரூ.50 முதல் ரூ.200 வரை வாழைத்தார்கள் விற்பனையாகிறது" என்றார்.

SCROLL FOR NEXT