ஊரடங்கு காலத்தில் மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் மத்திய - மாநில அரசுகள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அத்துடன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆங்காங்கே மக்களுக்கான உதவிகளைச் செய்து வருகின்றன. இதையடுத்து, இப்போது ஆளும் கட்சியினரும் சில பகுதிகளில் மக்களுக்கான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகளை வாங்கிச் செல்வதற்குதான் மக்கள் ஊரடங்கு சமயத்திலும் அலைபாய்கிறார்கள். காய்கறிக் கடைகளுக்குச் சென்றால் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு கால்கடுக்க வரிசையில் நிற்க வேண்டி இருக்கிறது. அத்துடன் இந்தக் கடைகளுக்கு வரும்போதும், போகும்போதும் காவலர்களிடம் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தச் சங்கடங்களை எல்லாம் தவிர்ப்பதற்காக திருச்சி மாவட்ட அதிமுகவினர் பொதுமக்களுக்குத் தேவையான காய், கனிகளை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கும் சேவையைத் தொடங்கி இருக்கிறார்கள்.
அரசு அறிவித்துள்ள ஊரடங்கு மற்றும் சமூக விலகல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்கும் பொருட்டு திருச்சி மாவட்ட அதிமுகவினர் காய் கனிகள் அடங்கிய தொகுப்புப் பையினை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார் நேற்று பொன்மலைப் பகுதியில் உள்ள மக்களுக்கு வீடு வீடாகச் சென்று காய்கறிகள் அடங்கிய பைகளை வழங்கித் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
ஊரடங்கு அமலில் இருக்கும் காலம் வரை தினமும் 1000 பேருக்கு இந்த காய்கறிப் பைகள் இலவசமாக அளிக்கப்படும். தினம் ஒரு பகுதியாக இந்தப் பைகள் வழங்கப்படும் என்று அதிமுகவினர் தெரிவித்தனர்.