சென்னையில் மாநகராட்சி ஆய்வில் 1,222 பேருக்கு சளித்தொற்று உள்ளதாக ஆய்வில் தெரியவந்தது. அவர்களை 15 நாள் கண்காணிக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது சுகாதாரத்துறை கண்காணிப்பு நடவடிக்கை என்கிற முறையைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வீடு வீடாகக் கணக்கெடுக்கும் பணியை தினந்தோறும் செய்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சியும் இதேபோல் 15 மண்டலங்களிலும் வீடு வீடாகக் கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கி நடத்தி வருகிறது.
இவ்வாறு கணக்கெடுக்கும் பணியில் வீடு வீடாகச் சென்று வீட்டிலுள்ளவர்கள் விவரம், அவர்களில் யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா? நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சுவாசக்கோளாறு, இதய நோய், கிட்னி மாற்று சிகிச்சை போன்ற நாட்பட்ட நோய்கள் உள்ளதா எனக் கேள்வி கேட்டு பதிவு செய்து வருகின்றனர். இந்தப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
சளி, காய்ச்சல் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உள்ளது சாதாரண காய்ச்சலா அல்லது நோய்த்தொற்றுக்கான அறிகுறி ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் இன்று தெரிவித்துள்ள ஒரு தகவலில் சென்னை மாநகராட்சி இவ்வாறு ஆய்வு செய்ததில் 1222 பேருக்கு காய்ச்சல், சளி அறிகுறி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 607 பேருக்கு சாதாரண காய்ச்சல், சளி இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனாலும் மொத்தம் உள்ள 1,222 பேரையும் 14 நாட்களும் கண்காணிக்க முடிவெடுத்துள்ளனர்.