ஈரோட்டில், கள்ளச் சந்தையில் மதுபானங்கள் பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதால், வாரம் ஒருநாள் பொது இடத்தில் சமூக இடைவெளியுடன் மது விற்பனை செய்ய வேண்டும் என்று மதுப்பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் 203 டாஸ்மாக் மதுபானக்கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.1.10 கோடிக்கு, மதுபானங்கள் விற்பனையாகி வந்தன. ஊரடங்கு உத்தரவு காரணமாக, மார்ச் 24-ம் தேதி மாலை 6 மணியுடன் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால், கள்ளத்தனமாக மது விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது.
டாஸ்மாக் கடை மூடப்பட்ட ஒரு வார காலத்தில் 180 மில்லி அளவு (குவார்ட்டர்) கொண்ட ரூ.130 மதிப்புள்ள பிராந்தி, விஸ்கி, ரம் வகைகள், கள்ளச்சந்தையில் ரூ. 250 முதல் 300 வரை விற்பனையாகிறது. இப்போது, மேலும் விலை அதிகரித்து, ஒரு குவார்ட்டர் ரூ. 500 வரை விற்பனை ஆகிறது.
இதனிடையே, கள்ளச்சந்தை மது விற்பனையில் சிலர் ஈடுபட்டுள்ளதாக மதுப் பிரியர்கள் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறும்போது, ‘‘பூட்டப்பட்ட டாஸ்மாக் கடையை சிலர் திறந்து, மதுபாட்டில்களை வாங்கி, தனது ஆதரவாளர்கள் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதுதவிர நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஈரோடு வெண்டிபாளையம் வழியாகவும், பவானி வழியாகவும் மதுபானங்கள் கொண்டு வரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, காய்கறிச்சந்தையை பேருந்து நிலையத்துக்கு மாற்றியது போல, பெரிய மைதானத்தில் சமூக இடைவெளியுடன் வாரம் ஒருநாள் மது விற்பனைக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் தவறான முடிவுகளை எடுப்பதும் தடுக்கப்படும்” என்றனர்.