தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சங்கரன்கோவில் வட்டம், குருக்கள்பட்டி பகுதியில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த மழையில் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனுக்கு மதிமுக மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில், “குருக்கள்பட்டி பகுதியில் 8-ம் தேதி சூறைக்காற்றுடன் மழை பெய்ததில், விளைச்சல் நிலையில் இருந்த பல விவசாயிகளுக்குச் சொந்தமான 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் விழுந்து சேதமடைந்துவிட்டன.
அதேபோல், பல ஏக்கர் மக்காச்சோளம், பருத்தி மற்றும் உளுந்து பயிர்களும் பாதிப்பு அடைந்துள்ளன. சில வீடுகளும் சூறைக்காற்றால் சேதமடைந்து உள்ளன.
சேதங்களின் மொத்த மதிப்பு பல லட்சங்கள் இருக்கும். ஏற்கெனவே கடன்பட்டு தவிக்கும் விவசாயிகளுக்கு தாங்க முடியாத பெரும் பாதிப்பாக உள்ளது.
பாதிக்கப்ப்டட விவசாய நிலங்களையும், வீடுகளையும் வருவாய்த்துறை மூலம் சேத மதிப்பீடு செய்து பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.