தமிழகம்

அத்தியாவசியப் பொருட்களை பதுக்கினாலோ கூடுதல் விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை: ராமநாதபுரம் ஆட்சியர் எச்சரிக்கை

கி.தனபாலன்

அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கினாலோ, கூடுதல் விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் எச்சரிக்கை விடுத்தார்.

நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி இரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தினமும் காய்கறிகள், பழங்கள் தங்கு தடையின்றி சரியான விலைக்கு கிடைத்து வருகிறது.

ஆனால் ஊரடங்கு தொடங்கி 10 நாட்களுக்கும் மேல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தியாளர்களிடம் இருந்து சில்லறை வியாபாரிகளுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் அனுப்பப்படவில்லை.

அதனால் அரிசி, மளிகைப் பொருட்களுக்கு மாவட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் விலையும் உயர்ந்துவிட்டன. குறிப்பாக அரிசி கிலோவிற்கு ரூ. 1 முதல் 2 வரையிலும், பருப்பு வகைகள் வெல்லம், நாட்டுச்சக்கரை, சீனி போன்ற பொருட்கள் கிலோவிற்கு ரூ. 5 முதல் ரூ. 10 வரையும் உயர்த்தி விற்கப்படுகிறது.

கிருமி நாசினியாக மஞ்சள் தூளை அதிகளவில் மக்கள் பயன்படுத்துவதால் அதற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, கடைகளில் கிடைக்கவில்லை. சமையல் எண்ணெய் வகைகளும் கிலோவிற்கு ரூ. 10 முதல் 15 வரை உயர்ந்துவிட்டது.

இருந்தபோதும் வேறு வழியின்றி மக்கள் வாங்கும் நிலை உள்ளது. விலை ஏற்றத்தால் ஏழை, எளிய மக்கள் மளிகை பொருட்கள், அரிசி வாங்க சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் இன்று ராமநாதபுரம் நகரில் உள்ள மளிகை, அரிசி மொத்த வியாபாரிகளின் கடைகள், குடோன்களை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாவட்டத்தில் மொத்தம் 85 தனியார் அத்தியாவசியப் பொருள்களுக்கான மொத்த விற்பனைக் கடைகளும், 4,856 சில்லறை விற்பனைக் கடைகளும் உள்ளன. கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

தனியார் கடைகளில் மொத்தம் 1,025 டன் அரிசி, 45 டன் பருப்பு வகைகள், 210 டன் சர்க்கரை, 1.10 லட்சம் லிட்டர் எண்ணெய் கையிருப்பில் உள்ளது.

தினமும் சுமார் 75 டன் காய்கறிகளும், 45 டன் பழ வகைகளும் விற்பனைக்கு வருகிறது வியாபாரிகள் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கினாலோ, கூடுதல் விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT