கரோனா பாதிப்பையொட்டி சென்னையில் இருந்து மதுரைக்கு சரக்கு ரயில் மூலம் முக்கிய மருந்து பொருட்கள் வந்தடைந்தன.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நாடெங்கும் ஊரடங்கு அமலில் உள்ளது. அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது.
பயணிகளுக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மருந்து, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவையாக்கான பொருட்களை கொண்டு செல்வதற்கென சென்னை- நாகர்கோயில் வழித்தடத்தில் மதுரை வழியாக சரக்கு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது.
ஒருநாள் விட்டு ஒருநாள் சரக்கு ரயில் ஓடும் இந்த சரக்கு ரயில் 3 பெட்டிகளுடன் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு விழுப்புரத்திலும், 9 மணிக்கு விருத்தாச்சலத்திலும், 9.55 அரியலூரிலும், 11 மணிக்கு திருச்சியிலும், 12.40 திண்டுக்கல்லிலும் நின்று மருத்து பொருட்களை இறக்கியது.
மதியம் 1.50 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தது. கரோனா தடுப்பு உள்ளிட்ட மருந்து, மாத்திரை, மருத்துவ உபகரணங்கள் என, சுமார் 2 டனுக்கு மேற்பட்ட பொருட்கள் அடங்கிய பார்சல் பெட்டிகளை இறக்கியது.
தொடர்ந்து விருதுநகர், நெல்லை, நாகர்கோவிலும் மருந்து பொருட்களை இறக்கப்பட்டது.
இந்த ரயிலில் ஒவ்வொரு ரயில் நிலையத்தில் இருந்தும், அடுத்த ஊருக்கு அனுப்பும் பிற பொருட்களும் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டன.
ஊரடங்கு முடியும் வரை இவ்வழித்தடத்தில் இந்த சரக்கு ரயில் ஓடும் என, மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.