தேனியில் ட்ரோன் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு போலீஸார் மூலம் எச்சரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் நேற்றுமுன் தினம் வரை 23 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். போடி, தேனி அல்லிநகரம் பகுதியில் இத்தொற்று பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அதிகம் உள்ளனர். எனவே இப்பகுதியில் இருந்து 5 கிமீ. சுற்றளவிற்கு தீவிர கண்காணிப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று புதியதாக 16 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதனால் தேனி மாவட்டத்தில் கரோனா பாதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது.
இந்த 16 பேரும் போடியைச் சேர்ந்தவர்கள். எனவே போடி மற்றும் தேனியின் நகரப் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இதனால் மளிகைப் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அருகில் உள்ள கிராம பகுதிகளுக்குச் சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இதனால் இருசக்கரவாகனங்களை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தேனி, அல்லிநகரம், போடியில் உள்ள பல சாலைகள் மூடப்பட்டன.
டூவீலர்கள் செல்வதைக் குறைக்க இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தேனி, அல்லிநகரம், போடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூட்டமாக நிற்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு போலீஸார் மூலம் எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.
மூணாறில் கடைகள் அடைப்பு:
மூணாறில் டூவீலர்களில் சுற்றுபவர்களை கட்டுப்படுத்த அனைத்து கடைகளும் ஒருவாரத்திற்கு மூடப்பட்டது.
கேரளமாநிலம் மூணாறுக்கு உடுமலைப்பேட்டை, தேனி பகுதிகளில் இருந்து காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடைகள் செயல்பட்டு வந்தன.
இதனால் மூணாறைச் சுற்றியுள்ள சூரியநல்லி, குண்டலாறு, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மூணாறு வந்து அத்யாவசியப் பொருட்களை வாங்கி வந்தனர்.
இருப்பினும் காய்கறி, மருந்து வாங்கச் செல்வதாகக் கூறி பலரும் டூவீலர்களில் அதிக எண்ணிக்கையில் வந்து கொண்டிருந்தனர்.
இதனைக் கட்டுப்படுத்துவதற்காக தேவிகுளம் துணை ஆட்சியர் பிரேம்கிருஷ்ணன் மூணாறில் உள்ள அனைத்து கடைகளையும் ஒரு வாரத்திற்கு மூட உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
மூணாறு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருந்து மற்றும் பெட்ரோல் பங்க்குகள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது.