சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் இன்று சென்னை முழுவதும் மழை பெய்தது. ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தே மக்கள் மழையை ரசித்தனர்.
வானிலை ஆய்வு மையம் வானிலை நிலவரம் குறித்து நேற்று கூறுகையில், ''திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், நாகை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரண்மாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்'' என்று தெரிவித்தது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 95 டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்சமாக 82.4 டிகிரி பாரன்ஹீட் பதிவாக வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், சென்னையில் தற்போது இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் கருமேகங்கள் சூழ்ந்ததால் பிற்பகல் 3.30 மணிக்கே இரவு 7 மணி போல் இருள் சூழ்ந்தது.
சென்னை புறநகரான பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் ஆரம்பித்த மழை தொடர்ந்து சின்னமலை, கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்தது. பாரிமுனை,மைலாப்பூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
போரூர், ராமாபுரம், வளசரவாக்கம்,. பூந்தமல்லி, ஈக்காடுதாங்கல், ஆலந்தூர், வேளச்சேரி, கிண்டி, அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, பட்ரோடு, நந்தம்பாக்கம், மீஞ்சூர், பொன்னேரி, செங்குன்றம், புழல், மாதவரம் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது.
சாலையில் ஊரடங்கு காரணமாக வாகனங்கள் எதுவுமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. சாலையில் பாதுகாப்புக்காக நின்ற போலீஸாரும் ஒருசில பொதுமக்களும் மழையை ரசித்தனர். திடீர் மழை காரணமாக சென்னையில் சூழ்நிலை குளிர்ச்சியாக மாறி ரம்மியமாக மாறிப்போனது.
சென்னையில் திடீர் மழை, காற்று, வானம் இருண்டு கிடப்பதைப் பார்த்து வீட்டுக்குள் அடங்கிக் கிடந்த பொதுமக்கள் மொட்டை மாடிக்கும் தெருக்களுக்கும் வந்து மழையை ரசித்தனர். சிலர் செல்போனில் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.
திருவல்லிக்கேணியில் பெய்த பலத்த மழை காரணமாக வாலாஜா சாலையில் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் மொட்டைமாடியில் இருந்த கோபுரம் சாலையின் குறுக்கே விழுந்தது. சாலையில் அப்போது வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.