மதுரையில் ‘கரோனா’வுக்கு உயிரிழந்தவரின் மனைவி, 2 மகன்கள் இந்த நோயிலிருந்து மீண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளது, மற்ற நோயாளிகள் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
‘கரோனா’ நோயாளிகள் எப்படி ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுகிறார்கள், அதற்கு முன் நடக்கும் மருத்துவப்பரிசோதனை,கண்காணிப்பு என்ன? என்பதை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை ‘கரோனா’வுக்கு 679 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 24 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் ‘கரோனா’வுக்கு முதலில் மதுரை அண்ணாநகரை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அவரது குடும்ப உறுப்பினர்களை பரிசோதனை செய்ததில் அவரது மனைவி, 2 மகன்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள், சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.
நேற்று இந்த மூவரும் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இது, மருத்துவமனையில் சிகிச்சைப்பெறும்மற்ற நோயாளிகளுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. நல்ல ஆரோக்கியமான உணவும், மருத்துவர்கள் ஆலோசனைகளை பின்பற்றினாலே ‘கரோனா’ உயிரிழப்பில் இருந்து நோயாளிகள் தப்பிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ‘கரோனா’ தொற்று நோய் தடுப்பு மதுரை மாவட்ட நியமன ஒருங்கிணைப்பு அதிகாரியும், ஒய்வு பெற்ற ‘டீன்’னுமாகிய மருதுபாண்டியன் கூறியதாவது:
‘கரோனா’ நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதும், அவர்கள் மருத்துவர்கள் ஆலோசனை பேரில் அவர்களுடைய சளி, இருமல், காய்ச்சல், தும்மல் போன்ற இந்த நோய் தொந்தரவுக்கு தகுந்தவாறு ‘ஆன்டிபயாட்டிக்’ சிகிச்சை, ஆரோக்கியமான சிறப்பு உணவுகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்பானங்கள் வழங்கப்படுகிறது.
மூச்சு விட திணறும் நோயாளிகள் ஐசியூ வார்டில் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது.
இதில் அவர்கள் உடல்நிலை முன்னேற்றத்தை பொறுத்து 10-வது நாளில் ஒரு முறையும், 14-வது நாளில் இரண்டாவது முறையும் ‘கரோனா’ பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் அவர்களுக்கு சோதனையில் நெகட்டிவ் வந்தால் அவர்கள் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர்.
இதில், முதல் முறை நெகட்டிவ்வும், இரண்டாவது முறை பாசிட்டிவும் வந்தால் அவர்கள் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்கள்.
சில நோயாளிகளுக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தும் அவர்களுக்கு உடல் தொந்தரவு அதிகமாக இருந்தால் அவர்கள் மீண்டும் மருத்துவக்குழுவின் ஆலோசனையின் பேரில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், ’’ என்றார்.