கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள கயத்தாறு வட்டம், அய்யனார்ஊத்தில் சுகாதாரப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கயத்தாறு அருகே அய்யனார்ஊத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, அய்யனார்ஊத்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், அவர்களுக்கு அடிப்படை தேவையான காய்கறிகள், அரிசி, மளிகைப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பதற்கு 16 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தன்னார்வலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து வட்டாட்சியர் பாஸ்கரன் அறிவுரைகளை வழங்கியுள்ளார். மேலும், இப்பகுதியில் வருவாய் துறை சார்பில் வருவாய் ஆய்வாளர் காசிராஜன், கிராம நிர்வாக அலுவலர் சத்யராஜ், ஊராட்சி ஒன்றியத் தலைவர் சண்முகையா, ஊராட்சி செயலாளர் அய்யனார் உள்பட சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்டோர் அப்பகுதியில் முகாமிட்டு, கிராமமக்கள் வெளியே செல்லாமல் இருப்பதற்கும், வெளியில் இருந்து உள்ளே யாரும் நுழையாமல் இருப்பதையும் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், அப்பகுதி பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் கிடைக்க வேண்டிய பொருள்களும் அவர்களது வீடுகளுக்கே கொண்டு
சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றம் சார்பில் தினமும் அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி டிராக்டர் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வாறுகால் சுத்தம் செய்தல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் குடியிருப்போருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், மருத்துவப் பரிசோதனைகள் முறையாக நடைபெற்று வருகிறது.
அப்பகுதியைச் சேர்ந்த யாரேனும் நோயினால் பாதிக்கப்பட்டால் உடனடியாக தன்னார்வ தொண்டர்களுக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் மூலம் மருத்துவக் குழுவினர் அவர்களது இல்லத்திற்கு சென்று முதலுதவி செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கயத்தாறு காவல் ஆய்வாளர் முத்து தலைமையில் அய்யனார்ஊத்து பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.