75 ஆயிரத்து 834 பேர் திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.9) தலைமை செயலகத்தில், ஊரடங்கால் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் மற்றும் பயன்பெற்ற மக்களின் எண்ணிக்கை குறித்து, செய்தியாளர்களிடம் விவரித்துப் பேசியதாவது:
"1 லட்சத்து 17 ஆயிரத்து 96 பேர் மீது ஊரடங்கை மீறியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1 லட்சத்து 27 ஆயிரத்து 792 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 99 ஆயிரத்து 797 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து 40 லட்சத்து 9,944 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் ரூ.1,000, நிவாரண பொருட்கள் வழங்க 2,014.70 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 1 கோடியே 93 லட்சத்து 82 ஆயிரத்து 420 குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளன. அதாவது, 96.30% அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 95 லட்சத்து 1,932 அட்டைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
12 லட்சத்து 13 ஆயிரத்து 882 பேர் கட்டுமான தொழிலாளர்களுக்கான நிவாரணம் பெற தகுதியானவர்கள். 121.39 கோடி ரூபாய் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 1 லட்சத்து 46 ஆயிரத்து 817 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய அனைவருக்கும் 2 நாட்களில் வழங்கப்பட்டுவிடும்.
64 ஆயிரத்து 674 வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் இருக்கின்றனர். இவர்களுக்கென 6.43 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 19 ஆயிரத்து 464 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படுகின்றன. எஞ்சிய அனைவருக்கும் இன்னும் 2 நாட்களில் வழங்கப்பட்டுவிடும்.
ஓட்டுநர் தொழிலாளர் நிவாரணம் பெறுபவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 800 பேர். அவர்களுக்கு 8.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 26 ஆயிரத்து 222 பேர் நிவாரண பொருட்கள் பெற்றுள்ளனர்.
1 லட்சத்து 71 ஆயிரத்து 85 பேர் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். 1 லட்சத்து 12 ஆயிரத்து 74 கட்டிட தொழிலாளர்கள் உள்ளனர். பிற வணிக நிறுவனங்களில் 20 ஆயிரத்து 794 பேர் பணிபுரிகின்றனர். கரும்பு வெட்டும் பணியில் 3,700 பேர் ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக 3 லட்சத்து 7 ஆயிரத்து 456 வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் 7,376 பேர் பணிபுரிகின்றனர்.
மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று காய்கறிகள் விற்பனை செய்ய நடமாடும் காய்கறி விற்பனை மையங்களை தமிழக அரசு தொடங்கியுள்ளது. நேற்று (ஏப்.8) ஒரு நாள் மட்டும் வேளாண்மைத்துறை சார்பாக, சுமார் 2,000 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உழவர் சந்தை மூலமாக மட்டும் 1,070 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
வேளாண்மைத்துறை சார்பாக, 3,500 வாகனங்கள் மூலமாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சிஎம்டிஏ சார்பாக 100 வாகனங்கள் மூலமாக காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளன. 111 குளிர்சாதன கிடங்குகள் உள்ளன. அவற்றில் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை பதப்படுத்திக்கொள்ளலாம். வரும் 30-ம் தேதி வரை அதற்கு வாடகை வசூல் செய்யப்பட மாட்டாது.
தமிழகத்தில் கிடைக்காத மளிகை பொருட்கள் அண்டை மாநிலத்தில் இருந்து கூட்டுறவுத்துறை மூலமாக கொள்முதல் செய்யப்படும்.
137 தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 16 ஆயிரத்து 525 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் 96 ஆயிரத்து 773 படுக்கை வசதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 வேளையும் உணவளிக்கப்படுகின்றன. 75 ஆயிரத்து 834 பேர் திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 80 வயதைக் கடந்தவர்களுக்கு வீடுகளுக்கே சென்று முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகின்றது. 1 லட்சத்து 95 ஆயிரத்து 249 மாற்றுத்திறனாளிகளுக்கு 2 மாதங்களுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கின்றது. 13 லட்சத்து 66 ஆயிரத்து 579 பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகின்றது.
அங்கன்வாடிகளில் 24 லட்சம் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன"
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.