தென்காசி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
தென்காசி மாவட்டம், நன்னகரம், புளியங்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள், டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் ஆவர்.
டெல்லி சென்று வந்த மேலும் 6 பேர் தென்காசி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சேர்க்கப்பட்டு, அவர்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், அவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது.
இருப்பினும், மருத்துவமனையிலேயே தொடர் கண்காணிப்பில் அவர்கள் இருந்தனர். மீண்டும் ஒரு முறை அவர்களது ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதிலும் அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில், தென்காசியைச் சேர்ந்த ஒருவர், மத்தளம்பாறையைச் சேர்ந்த ஒருவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தென்காசி அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் தென்காசியைச் சேர்ந்தவர் டெல்லி சென்று வந்தவர். மத்தளம்பாறையைச் சேர்ந்தவர் வெளிநாடு, வெளிமாநிலத்துக்கு செல்லாதவர். அவருக்கு சளி, மூச்சுத் திணறல் இருந்தது. அவர்களுக்கும் ரத்த மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவர்களுக்கும் கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, தென்காசியைச் சேர்ந்தவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மற்றொருவருக்கு கரோனா தொற்று இல்லாவிட்டாலும் மூச்சுத் திணறல், சளி இருப்பதால், அவர் மட்டும் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 7 பேரும் 3 வாரங்கள் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தென்காசி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் கூறினார்.
கிருமி நாசினி பாதை அமைப்பு:
கரோனா வைரஸ் பரவாமல் தடுப்ப தனி நபர் இடைவெளி, கிருமிநாசினி பயன்பாடு குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் சந்தைகளில் கிருமிநாசினி பாதை பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக கிருமிநாசினி பாதை அமைக்கப்பட்டுள்ளது.
தினமும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போதும் தூய்மைப் பணியாளர்கள் இந்த கிருமிநாசினி பாதை வழியாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் தற்காலிக காய்கறி சந்தையில் கிருமிநாசினி பாதை இன்று செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் இந்த கிருமிநாசினி பாதை வழியாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.