தமிழகம்

சமூக இடைவெளி இல்லாமல் கும்பலாகச் சென்றவர்களைத் தட்டிக்கேட்ட ரியாஸ்கானைத் தாக்க முயற்சி: காவல் நிலையத்தில் புகார்

செய்திப்பிரிவு

சென்னை கானாத்தூரில் வசிக்கும் நடிகர் ரியாஸ்கான் அவரது வீட்டின் அருகே சமூக இடைவெளியைக் கண்டுகொள்ளாமல் கும்பலாக கூடிப் பேசிக் கொண்டிருந்தவர்களை தட்டிக்கேட்டதால் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் ரியாஸ்கானைத் தாக்க முயன்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் ரியாஸ்கான் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக நடித்து வருபவர் ரியாஸ்கான். இவரது மனைவி உமாவும் நடிகைதான். இவர்கள் மகன் ஷாரிக், பிக் பாஸ் சீசன் 3-ல் பங்கேற்றவர். சென்னை, கானாத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட பனையூா் ஆதித்யாராம் நகரில் ரியாஸ்கான், குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ரியாஸ்கான் குடும்பத்துடன் வீட்டில் இருந்து வருகிறார். அவரது வீட்டருகே அடிக்கடி சிலர் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். இது வாடிக்கையாக இருந்துள்ளது.

நேற்று முன்தினமும் அவரது வீட்டின் அருகே 10-க்கும் மேற்பட்டோர் கும்பலாக நின்று பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது ரியாஸ்கான் அவர்களை அழைத்து ஊரடங்கு நிலை அமலில் இருக்கிறது. அதன் நோக்கமே சமூக இடைவெளிதான். ஆனால், அதைக் கடைப்பிடிக்காமல் இப்படி தினமும் கும்பலாக நிற்பது சரியா எனக் கேட்டுள்ளார்.

இதையடுத்து அந்த கும்பலில் உள்ளவர்கள் அதைக் கேட்க நீ யார் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அக்கும்பலில் உள்ளவர்கள் ரியாஸ்கானைத் தாக்கவும் முயன்றுள்ளனர். பின்னர் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

நடந்த சம்பவம் குறித்து கானாத்தூர் காவல் நிலையத்தில் ரியாஸ்கான் புகார் அளித்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம், ரோந்து வந்து அவ்வப்போது கும்பல் கூடாமல் பார்த்துக்கொண்டால் போதும் என ரியாஸ்கான் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT