பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

புதுச்சேரியில் கடும் நிதி நெருக்கடி; ரூ.570 கோடி வரை வருவாய் பற்றாக்குறையால் புது உத்தரவு

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் ரூ.570 கோடி வரை கடந்த நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தேவையில்லாத செலவுகளை மே 1 வரை தள்ளிவைக்க அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, புதுவை அரசின் நிதித்துறை செயலாளர் சுர்பிர் சிங் அனைத்து அரசுத் துறைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"கடந்த நிதி ஆண்டில் ரூ.570 கோடி வரை வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியில் இழப்பீடு கிடைக்காதது, கலால் மற்றும் பத்திரப்பதிவு இலக்கினை எட்டாதது போன்ற காரணங்களால் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது

இது புதுவை அரசின் வருவாயில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி ஊரடங்கு உத்தரவால் கலால், ஜிஎஸ்டி, போக்குவரத்து, பத்திரப்பதிவு உள்ளிட்ட துறைகளின் வருவாயை ஏப்ரல் மாதம் முடியும் வரை எதிர்பார்க்க முடியாது

இத்தகைய சூழ்நிலையில் குறைவான ரொக்கம் கையிருப்பில் இருப்பதால் அவசர செலவுகளை மட்டுமே மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் காலாண்டு நிதி உதவியும் மே மாதத்திலேயே கிடைக்கும். எனவே, அத்தியாவசியம் இல்லாத விஷயங்களுக்கு செலவு செய்வதை வருகிற மே 1-ம் தேதி வரை அனைத்துத் துறைகளும் தள்ளி வைக்க வேண்டும்".

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT