கரோனா தடுப்புப் பணிகளுக்காக புதுச்சேரியில் பெட்ரோல், டீசலுக்கு ஒரு சதவீதம் வரி உயர்த்தப்படுகிறது என்றும், இந்த வருவாய் கரோனா தடுப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்களுக்கு பாதுகாப்புக் கவசங்கள், முகக் கவசம் உள்ளிட்டவற்றுக்காக மத்திய அரசிடம் ரூபாய் 995 கோடி நிதி வழங்க முதல்வர் நாராயணசாமி கோரியிருந்தார். ஆனால் இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.
இந்நிலையில், புதுச்சேரியில் கரோனா நிதிக்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ஒரு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான வரி 22.15 சதவீதமும, டீசல் மீதான வரி 18.15 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி நாளை (ஏப்.10) முதல் அமலுக்கு வருகிறது.
உயர்த்தப்பட்ட வரி விதிப்பில் இருந்து வசூலாகும் நிதியை கரோனா சிகிச்சை மற்றும் தடுப்புப் பணிகளுக்காக சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும் என நிதித்துறை செயலர் சுர்பிர் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.