சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 72 வயது மூதாட்டி முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.
தமிழகத்தில் 738 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 48 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் 8 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நம்பிக்கை அளிக்கும் செய்தியாக, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 72 வயது மூதாட்டி முழுமையாக குணமடைந்து நேற்று (ஏப்.8) வீடு திரும்பினார்.
சென்னை அடுத்த பொழிச்சலூரை சேர்ந்த 74 வயது மூதாட்டிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், கடந்த 26-ம் தேதி சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புடன் இருந்த அவருக்கு கரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தீவிர சிகிச்சையைத் தொடர்ந்து, கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த அவர் நேற்று வீடு திரும்பினார். டீன் ஜெயந்தி, மருத்துவக் கண்காணிப்பாளர் நாராயண சாமி, டாக்டர் ரகுநந்தன் உள்ளிட்ட குழுவினர் பழக்கூடை கொடுத்து அவரை வழியனுப்பி வைத்தனர். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் நேற்று (ஏப்.8) செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் இதுவரை 21 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதில், நம்பிக்கை அளிக்கும் செய்தியாக, 72 வயது மூதாட்டி ஒருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.