கரோனா வைரஸ் தடுப்பில் ‘வருமுன் காப்போம்’ என்ற முதுமொழிக்கேற்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மக்களின் நம்பிக்கையை தமிழக முதல்வர் பழனிசாமி பெற்றுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கரோனா வைரஸ் தொற்றை பேரிடராக மத்திய அரசு அறிவிக்கை செய்துள்ள நிலையில், ‘வருமுன் காப்போம்’ என்ற முதுமொழிக்கேற்ப போர்க்கால அடிப்படையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து ஒட்டுமொத்த தமிழக மக்களின் நம்பிக்கையையும் முதல்வர் பழனிசாமி பெற்றுள்ளார்.
144 தடையுத்தரவு அமலில்உள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவைப்படும் முக்கியஉணவுப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க மனித நேய நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்துதல் முறையை தீவிரப்படுத்தி மக்களை பாதுகாக்க, ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து தினக்கூலிகள், விவசாயக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முதல் கட்டமாக ரூ.500 கோடியை பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து முதல்வர் ஒதுக்கினார். பின், பிற துறைகளுக்கு ரூ.3 ஆயிரத்து 280 கோடியை ஒதுக்கினார். அனைத்துஅரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிவாரணம், ஏப்ரல்மாதத்துக்கான பொருட்கள் இலவசம் என்றும் உத்தரவிட்டார். இதுபோல், கட்டிடத் தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்களுக்கு சிறப்பு தொகுப்பாக ரூ.1000 மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்க உத்தரவிட்டார்.
பிற மாநிலங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 34 ஆயிரத்து 569 தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்பட வைத்ததோடு, நடைபாதை வியாபாரிகளுக்கு கூடுதலாக ரூ.1000 வழங்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளார். வீட்டுவசதி வாரியம் உள்ளிட்டவற்றில் கடன் பெற்றவர்களுக்கு 3 மாதம் அவகாசம், ரூ.200 கோடியில் சிறப்பு கடனுதவி திட்டங்களையும் அறிவித்துள்ளார்.
எனவே, முதல்வர் அறிவித்த 144 தடைக்காலத்தில் அத்தியாவசிய தேவைகளின்றி நாம் வெளியில் செல்ல வேண்டாம். சுய தனிமை மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடித்தலே இந்த நோய்க்கு ஒரே தீர்வாகும் என்று அதில் தெரிவித்துள்ளார்.