கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் பசியைத் தீர்க்க பல்வேறு சமுதாய அமைப்புகளும் உணவு தயாரித்து, பல்வேறு பகுதிகளில் விநியோகிக்கின்றன. சேவா பாரதி அமைப்பு மாநிலம் முழுவதும் தினமும் 2 லட்சம் பேருக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் தொழில்கள் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடும் மக்களுக்கும், உணவு கிடைக்காத நிலையில் இருப்போருக்கும் பல்வேறு சமுதாய அமைப்புகளும் உணவு வழங்குகின்றன. கோவையில் சேவா பாரதி அமைப்பு, ஆர்எஸ்எஸ் அமைப்பு, ராஜஸ்தானி சங்கம் உள்ளிட்டவற்றுடன் இணைந்து, தினமும் 20 ஆயிரம் பேருக்கு மதிய உணவு வழங்குகிறது.
இதுகுறித்து சேவா பாரதி அமைப்பின் மாநிலத் தலைவர் ஆர்.ராமநாதன் `இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறும்போது, "மாநிலம் முழுவதும் 100 இடங்களில் உணவு தயாரித்து, 2 லட்சம் பேருக்கும்மேல் உணவு வழங்குகிறோம். குடிசைப் பகுதிகள், சாதாரண தொழிலாளர்களது வீடுகள், ஆதரவற்றோர் என வறுமை நிலையில் இருப்பவர்களுக்கு உணவு தயாரித்து வழங்குகிறோம். மேலும், உணவு தயாரிப்பதற்குத் தேவையான மளிகைப் பொருட்களையும் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வழங்கியுள்ளோம்.
கோவை ஆர்.எஸ்.புரம் சத்குரு சேவா சங்கத்தில், தரமான, தூய்மையான முறையில் தக்காளி சாதம் தயாரித்து, தினமும் 20,000 பேருக்கு விநியோகிக்கிறோம். இப்பணியில் ஏறத்தாழ 1,200 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, பல்லாயிரக்கணக்கானோருக்கு முகக் கவசங்கள், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பால், உடனிருப்பவர்களுக்கு டீ, மருத்துவப் பணியாளர்களுக்கு பூரி-சப்ஜி உள்ளிட்டவையும் தினமும் வழங்கி வருகிறோம்.
ஆனைகட்டி, ஆலாந்துறை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் தினமும் உணவு வழங்குகிறோம். இன்னும் 2 தினங்களில் குழந்தைகளுக்கு பால் பவுடர் விநியோகிக்க உள்ளோம். தமிழகத்தில் கரோனா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என அரசு அறிவிக்கும் வரை உணவுவழங்குவது தொடரும்" என்றார்.
இதேபோல, சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் பயிற்சிபெற்றவர்களால் நடத்தப்படும் பாரதி சேவா சங்கம் அறக்கட்டளை சார்பில் 30 ஆயிரம் பேருக்கு முகக் கவசங்கள், 22 ஆயிரம் கையுறைகள், 11 ஆயிரம் பேருக்கு உணவு, 1,500 பேருக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கியுள்ளோம். தினக்கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றோர், ஒப்பந்தத் தொழிலாளர்கள், காவல், சுகாதாரத் துறையினர், வடமாநிலத் தொழிலாளர்களுக்குஇவற்றை வழங்கியுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகி கே.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை கேட்டரிங் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்படுவதாக சங்கத் தலைவர் மாதம்பட்டி ஆர்.நாகராஜ் தெரிவித்துள்ளார். பாஜக மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசனின் மக்கள் சேவை மையம் சார்பில் `மோடி கிச்சன்' என்ற பெயரில் தினமும் 500 மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்படுகிறது.
கோவை மாவட்ட பாஜக தொழில்நுட்பப் பிரிவு செயலரான கவிதா ராஜன், கோவை ராமநாதபுரம் பகுதியில் 1,000 குடும்பத்தினருக்கு, தலா ரூ.200 மதிப்பிலான மளிகைக் கூப்பன்களை வழங்கியுள்ளார். இதன் மூலம் அருகில் உள்ள கடைகளில் இவற்றைக் கொடுத்து, தேவையான மளிகைப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதேபோல, பல்வேறு தன்னார்வ அமைப்புகள், சமூக சேவை இயக்கங்கள் சார்பில் தினமும் பல்லாயிரக்கணக்கானோருக்கு உணவுப் பொட்டலங்களும், உணவுப் பொருட்களும், மளிகை சாமான்களும் வழங்கப்படுகின்றன. இக்கட்டான சூழலில் மக்களின் பசியைத் தீர்க்க நிறைய சமூக அமைப்புகள் முன்வந்திருப்பதால், மக்கள் உணவின்றித் தவிக்கும்நிலை பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பேரிடர் காலங்களில் மக்களின் மனிதாபிமானம் வெளிப்படுவது ஒவ்வொருமுறையும் நிரூபிக்கப்படுகிறது.