தமிழகம்

அண்ணா நூற்றாண்டு நூலக குறைகளை சரிசெய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் உள்ள குறைபாடுகளை அதிகாரிகள் விரைவில் சரிசெய்து, அதற்கான அறிக்கையை செப்டம்பர் 15-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

சென்னையைச் சேர்ந்த எஸ்.டி.மனோன்மணி என்பவர், உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். ‘சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், சரியாக பரா மரிக்கப்படாததால் பொலிவிழந்து வருகிறது.

நூலகத்தை பராமரிக்கவும், தேவையான பணியாளர்களை நியமிக்கவும், புதிய புத்தகங்கள் வாங்கி வைக்கவும் உத்தரவிட வேண்டும். நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை விசாரித்து, வழக்கறிஞர்கள் பி.டி.ஆஷா, எம்.சுந்தர் ஆகியோர், நூலகத்தை ஆய்வு செய்து ஆகஸ்ட் 24-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர்கள் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

நூலகத்தில் உள்ள குறைகளை தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ள குழுவின் பணியை பாராட்டுகிறோம். நூலகத்தில் முறையான பராமரிப்பும், மேம்பாடும் இல்லை. அதைச் சரிசெய்வது ஒன்றும் அரசுக்கு கடினமான பணி இல்லை. நூலகத்தில் உள்ள கலையரங்கம், மாநாட்டுக் கூடங்கள், கருத்தரங்க அரங்குகள், ஆம்பிதியேட்டர் உள்ளிட்ட வசதிகளை வாட கைக்கு கொடுத்து வருவாயைப் பெருக்கும் வாய்ப்புள்ளது.

குழுவின் அறிக்கையுடன், அண்ணா நூற்றாண்டு நூலக ஊழியர்கள் நலச் சங்கத்தின் தகவலும் இணைக்கப் பட்டுள்ளது. அதன்படி, ஊழியர் களின் பணி விதிமுறைகள் நடை முறைப்படுத்த வேண்டும். நூலகத்தில் உள்ள காலிப்பணி யிடங்களை நிரப்புவதுடன், குறிப்பிட்ட வசதிகளை முழுமை யாக செய்து முடிக்கும் வகையில் கூடுதல் பணியிடங்களை உரு வாக்குவது குறித்தும் ஆராய வேண்டும்.

நூலகத்துக்கு தேவைப்படும் பணிகளை அதிகாரிகள் விரைவாகச் செய்ய வேண்டும். இந்த உத்தரவை நிறை வேற்றியதற்கான அறிக்கையை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT