தமிழகம்

உயிர்காக்கும் மருந்துகள் ஏற்றுமதியை அனுமதிக்கக் கூடாது: தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கோரிக்கை

கரு.முத்து

உயிர்காக்கும் மருந்துகளின் ஏற்றுமதியை இந்தியா நிறுத்தவேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ''கரோனா வைரஸை ஒழிக்கும் பணிகளை மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக முடுக்கிவிட்டிருக்கும் நிலையில், முக்கிய உயிர்காக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது நல்லதல்ல.

மனிதாபிமானம் எல்லையற்றது என்பது உண்மை. அதே சமயம் நமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகே, பிறரின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

நமது நாடு உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு. இங்கு அதிக அளவில் கரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், குறைந்தபட்சம் ஏப்ரல் மாதம் இறுதி வரையிலாவது இதுபோன்ற உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கக் கூடாது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மிரட்டல் தொனியிலான வேண்டுகோளுக்கு உடனடியாகப் பணிந்து, உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது என்பது நம் நாட்டின் நலன் சார்ந்த அரசியலுக்கு நல்லதல்ல. நம் நாட்டின் மக்கள்தொகையின் அளவுக்கேற்ப, இதுபோன்ற மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்வது அவசியமாகும்.

இந்த விஷயத்தில் மத்திய அரசு இந்திய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய முடிவெடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT