சிவகங்கை மாவட்டத்தில் பருப்பு, பாமாயில், சர்க்கரை வராததால் ரேஷன்கடைகளில் அரிசி மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதுவும் தரமற்ற அரிசியாக இருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
கரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அனைவரும் வீட்டிலேயே முடங்கியதால் பலர் வருமானமின்றியும், உணவுப்பொருட்கள் வாங்க முடியாமலும் தவிக்கின்றனர்.
இதையடுத்து அரசு சார்பில் நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம், 19 கிலோ அரிசி, ஒரு கிலோ கோதுமை, ஒரு கிலோ துவரம் பருப்பு, குடும்ப உறுப்பினருக்கு ஏற்ப சர்க்கரை, ஒரு லிட்டர் பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே டோக்கனுடன் ரூ.1,000 வழங்கியநிலையில், நேற்றுமுன்தினம் முதல் ரேஷன்கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தினமும் 50 முதல் 100 நபர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் 3.8 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஆனால் ரேஷன்கடைகளுக்கு 50 சதவீதம் கூட சர்க்கரை, பருப்பு, பாமாயில், கோதுமை போன்றவை அனுப்பவில்லை.
இதனால் பெரும்பாலான ரேஷன்கடைகளில் பருப்பு, சர்க்கரை போன்றவை தீர்ந்துவிட்டதாக கூறி அரிசி மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மற்ற பொருட்களை சில நாட்கள் கழித்து வாங்கி கொள்ளுமாறு விற்பனையாளர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அரிசியும் தரமற்று இருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். தரமற்ற அரிசியை மக்கள் வாங்க மறுத்ததால், சில கடைகளில் அரிசி விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடும்ப அட்டைதாரர்கள் கூறுகையில், ‘ஏற்கெனவே டோக்கன் பெறவே ரேஷன்கடைகளுக்கு அலைந்தோம். தற்போது பொருட்கள் வாங்குவதற்காக வந்தால் பருப்பு, சர்க்கரை, பாமாயில் இல்லை என்று கூறி மீண்டும் வரச்சொல்கின்றனர்,’ என்று கூறினர்.