தருமபுரி போலீஸார். 
தமிழகம்

ஊரடங்கு மீறல்; வாகனத்தை உடைத்த தருமபுரி போலீஸார்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

தருமபுரியில் ஊரடங்கை மீறி வெளியில் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளின் வாகன முகப்பு விளக்கு உள்ளிட்டவற்றை போலீஸார் அடித்து உடைத்தனர். இது போலீஸாருக்கு அவப்பெயரை உருவாக்கியுள்ள நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்க டிஜிபி திரிபாதி, தருமபுரி எஸ்.பி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 144 ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் வராமல் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதில் மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் தமிழக போலீஸார் அறிவுறுத்தும் விதத்திலும், எச்சரிக்கை செய்தும் பெரும்பாலும் வழக்குப் போடாமல் தோப்புக்கரணம் போடுதல், உடற்பயிற்சி செய்தல், கவாத்து பயிற்சி செய்தல், திருக்குறள் ஒப்பித்தல் போன்று நூதன தண்டனை கொடுத்து அனுப்பி வைக்கின்றனர்.

மொத்தமாக இத்தனை நாளில் 1 லட்சத்து 03 ஆயிரத்து 833 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 87,577 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீஸாரின் எச்சரிக்கையுடன் கூடிய அணுகுமுறை, பொதுமக்களிடம் கடுமை காட்டாமல் புத்தி சொல்லி அனுப்பும் நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் மத்தியில் போலீஸார் மதிப்பு உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் தருமபுரியில் பெண் ஆய்வாளர் தலைமையில் கடந்த 7-ம் தேதி ஆய்வில் இருந்த போலீஸார் அவ்வழியாக வந்த பொதுமக்களின் வாகனங்களைக் காரணமின்றி அடித்து உடைத்ததாகவும், முகப்பு விளக்கு, இண்டிகேட்டர், டேஞ்சர் லைட் உள்ளிட்டவற்றை ரூல் தடியால் அடித்து உடைத்ததாகவும் செய்தி வெளியானது.

இதில் பெற்றோருடன் வந்த சிறுவர்கள், கணவனுடன் வந்த மனைவி, இளம்பெண்கள் அலறினர்.

இந்தத் தகவல் தருமபுரி மாவட்ட எஸ்.பி. ராஜன் கவனத்திற்குச் சென்றது. அவர் உடனடியாக இதைக் கண்டித்து நிறுத்தச் சொன்னார். இதைப் பார்த்த பத்திரிகையாளர்களும் மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா கவனத்திற்குக் கொண்டு சென்றனர். பலர் டிஜிபிக்கும் புகார் அளித்தனர்.

இந்நிலையில் பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவரான துரை ஜெயச்சந்திரன், தருமபுரியில் ஊரடங்கை மீறி வந்தவர்களின் வாகனங்களின் முகப்பு விளக்குகளை காவல் துறையினர் அடித்து நொறுக்கிய விவகாரம் தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று டிஜிபி திரிபாதிக்கும், தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜனுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT