கேசவன் 
தமிழகம்

சீசன் நேரத்தில் ஊரடங்கு: வாழ்வாதாரம் இழந்த ஏ.சி. பழுதுநீக்குநர்கள்

என்.சுவாமிநாதன்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு நடவடிக்கையின் காரணமாக, பல்வேறு தொழில்கள் முடங்கிப்போயுள்ளன. குறிப்பாக, கோடை காலத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஏ.சி. பழுதுநீக்குநர்கள் இன்றைக்கு வேலை இழந்து தவிக்கின்றனர்.

ஏப்ரல், மே மாதங்களில்தான் வெயில் உக்கிரமாக இருக்கும். அதை முன்னிட்டே பள்ளி, கல்லூரிகளுக்கும் கோடை விடுமுறை விடப்படுகிறது. மக்கள், வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஏ.சி. வாங்க யோசிக்கும் காலமும் இதுதான். அதனால்தான் ஏ.சி. நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு கோடை காலத்தில் வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடியை அறிவிப்பார்கள்.

ஆனால், இந்த ஆண்டு கோடை காலத்தின் பெரும்பகுதி நாட்கள் ஊரடங்கில் போய்விட்டதால், ஏ.சி. விற்பனையகங்களும் மூடிக் கிடக்கின்றன. இதனால் புதிதாக வாங்கிய ஏ.சி.யைப் பொருத்திக் கொடுக்கும் பணியாளர்கள், ஏ.சி. மெக்கானிக்குகள், குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை ஏ.சி.யை சர்வீஸ் செய்வோர் என தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வருமானத்துக்கு வழியின்றி வாடி வருகின்றனர்.

இதுகுறித்து குமரி மாவட்டம், பறக்கையைச் சேர்ந்த ஏ.சி. பழுதுநீக்குநர் கேசவன் நம்மிடம் பேசுகையில், “இதுதான் எங்களுக்கு முக்கிய சீஸன். குறிப்பாக, ஏப்ரல், மே மாதங்களில் காலை முதல் மாலைவரை எப்போதுமே பரபரப்பாக வேலை இருந்துகொண்டே இருக்கும். தற்போது, ஊரடங்கின் காரணமாகப் போலீஸாரின் வாகனத் தணிக்கை கடுமையாக இருப்பதால், ஏ.சி. பொருத்தவோ, சர்வீஸ் செய்து தரவோ எங்களால் எங்குமே செல்ல முடியவில்லை. மேலும், கரோனா அச்சம் காரணமாக சர்வீஸுக்கு யாரும் தங்கள் வீடுகளுக்கு அழைக்கவும் தயங்குகிறார்கள்.

இது இந்த மாதத்தின் வருமானத்தை மட்டும் பாதிக்கும் விஷயம் அல்ல. சீஸன் நேரத்தில் ஏ.சி. விற்பனையகங்களும் மூடிவிட்டதால் அடுத்தடுத்த மாதங்களுக்கான சர்வீஸ் தொடர்பான வேலையையும் நாங்கள் இழந்திருக்கிறோம். எனவே, ஏ.சி. மெக்கானிக்குகளின் நிலையைக் கருத்தில்கொண்டு நிவாரண உதவி வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அரசு ஆவன செய்ய வேண்டும்!

SCROLL FOR NEXT