ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு கரோனா தொற்றை தடுக்கும் வகையில் புறக்காவல் நிலையத்தில் போலீஸார் கவச உடைகள் அணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தொற்றுநோய் சிகிச்சை, மற்றும் கரோனா வார்டில் தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 88 வயது மூதாட்டி உட்பட 6 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வரும் நாகர்கோவில் டென்னிசன் சாலையைச் சேர்ந்தவரின் மனைவியையும் கரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது ரத்தம், மற்றும் சளி மாதிரிகளை பரிசோதனைக்காக மருத்துவர்கள் திருநெல்வேலிக்கு அனுப்பியுள்ளனர்.
ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் பிற நோயாளிகளுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் திலீபன் மற்றும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நோயாளிகள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து மருந்து, மாத்திரைகளை வாங்கி செல்லுமாறும், மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெறுவதற்கான உதவிகளையும் செய்து வருகின்றனர். அத்துடன் கரோனா விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.