திருநெல்வேலியில் முதன்முதலாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 43 வயது மதிக்கத்தக்க நபர் குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.
துபாயிலிருந்து கடந்த மாதம் 17-ம் தேதி திரும்பிய திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்த அந்த நபருக்கு கடந்த மாதம் 22-ம் தேதி கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலுள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் நோயாளியான அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவக் குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலுள்ள தங்கும் விடுதியில் 3 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தது, வள்ளியூரில் நடைபெற்ற நிகழச்சி ஒன்றில் பங்கேற்றது, நாங்குநேரி ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தது, சொந்த ஊருக்கு சென்றது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் சென்ற இடங்கள், தங்கியிருந்த இடங்களில் சுகாதாரத்துறையினர் கரனோ தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அவர் தங்கியிருந்த தங்கும் விடுதி, அதையொட்டிய ஹோட்டலும் மூடப்பட்டது. அந்த நபருக்கு உதவியாக விடுதியில் இருந்த 8 பேரை கண்டறிந்து அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களையும் 28 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த நபர் குணமடைந்து நேற்று பிற்பகலில் பாளையங்கோட்டை பெருமாள்புரத்திலுள்ள வீட்டுக்கு திரும்பினார்.
அவருக்கு 3 முறை மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனையில் கிருமி தொற்று இல்லை என்பது தற்போது உறுதியாகியிருக்கிறது. இதனால் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஆனாலும் தொடர்ந்து 14 நாட்களுக்கு வீட்டுக்குள் தனிமைப்படுத்தி அவர் கண்காணிக்கப்படுவார் என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.