தமிழகம்

குமரியில் மழையில் சிக்கி அழியும் தருவாயில் 300 ஏக்கர் அறுவடை நிலை நெற்பயிர்கள்: ஊரடங்கிற்கு மத்தியில் பேரிழப்பை சந்தித்த விவசாயிகள்

எல்.மோகன்

குமரி மாவட்டத்தில் மழையில் சிக்கிய 300 ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் அழியும் தருவாயில் உள்ளன. ஊரடங்கிற்கு மத்தியில் பேரிழப்பை சந்தித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கும்பப்பூ இறுதிகட்ட அறுவடை பணிகள் நடந்து கொண்டிருந்த தருவாயில் கரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது அறுவடை ஆகாமல் இரணியல், சுசீந்திரம், தேரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட இறுதிகட்ட நெற்பயிர்கள் இருந்தன.

ஊரடங்கால் இவற்றை அறுவடை செய்வதற்கு இயந்திரங்கள், மற்றும் விவசாய தொழிலாளர்கள் கிடைக்காததால் வயல்களிலே விளைந்த நெற்கதிர்களில் இருந்து நெல்கள் உதிர தொடங்கின.

இவற்றை பார்த்த ஏழை விவசாயிகள் பலர் தாங்களாகவே களம் இறங்கி நெல்களை சிறிது சிறிதாக அறுவடை செய்து கரைசேர்த்தனர்.

ஊரடங்கு முடியும்போது விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து விடலாம் என பெரும்பாலான விவசாயிகள் எண்ணியிருந்தனர்.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மலையோரங்கள், மற்றும் நகர, கிராமப்புறங்களவில் விட்டுவிட்டு சாரல் மழை பொழிந்தது. இதில் அறுவடை பருவத்தில் இருந்த நெற்கதிகள் வயல்களில் சாய்ந்தன.

மழை நீர் நெல்மணிகளில் பலமணிநேரம் பட்டு குளிர்ந்துள்ளதால் தரையில் சாய்ந்த பயிர்களில் இருந்து நெல்கள் முளைக்கும் தருவாயில் உள்ளது.

தற்போது இரணியல், சுசீந்திரத்தின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வயல் பரப்புகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட நெற்கதிர்கள் இதே நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து நெல் விவசாயிகள் கூறுகையில்; குமரி மாவட்டத்தில் இந்த கும்பப்பூ சாகுபடியில் மழையும் போதிய கைகொடுத்து அணைகளிலும் நல்ல தண்ணீர் இருந்ததால் நல்ல மகசூல் கிடைத்தது.

இதனால் நல்ல லாபம் கிடைக்கும் என்றிருந்த நிலையில், கடைசியாக நடவுப்பணி மேற்கொண்ட நெற்பயிர்கள் அறுவடை தருவாயில் ஊரடங்கு அமலுக்கு வந்தது.

ஊரடங்கு முடிந்ததும் அறுவடை செய்யலாம் என இருந்த நேரத்தில் பரவலாக பெய்த சாரல் மழையில் நெல்கள் நாற்றாக முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அறுவடை இயந்திரங்களும் கிடைக்காமல், வேலைக்கு ஆட்களும் வராத நிலையில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடை செய்யமுடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடன் வாங்கி விவசாயம் செய்தவர்கள் பேரிழப்பை சந்தித்துள்ளோம் என்றனர்.

SCROLL FOR NEXT