தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன.
விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகாமல் தடுக்க மலையடிவார பகுதியில் சோலார் வேலி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு தென்காசி மாவட்டம், வடகரை அருகே மேட்டுக்கால், சம்போடை பகுதியில்15-க்கும் மேற்பட்ட யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளன.
ஏராளமான தென்னை மரங்களை வேரோடு சாய்த்தன. மேலும், மா மரங்களில் கிளைகளை முறித்து சேதப்படுத்தி உள்ளன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “இப்பகுதியில் ஒன்றை யானை பல நாட்களாக சுற்றித் திரிந்து விவசாய நிலங்களில் பயிர்கள், மரங்கள், தண்ணீர் குழாய்கள் போன்றவற்றை சேதப்படுத்தியது. கடந்த 20 நாட்களாக யானை தொந்தரவு இல்லை.
இந்நிலையில், நேற்று இரவில் 15-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வந்துள்ளன. சவுகத்அலி, அப்துல்காதர், ரெசவு முகமது, யாசின், செய்யது அம்பியா ஆகியோருக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்துவிட்டன. ஒவ்வொரு மரமும் சுமார் 30 வயது உடைய பெரிய மரங்கள். மேலும், 20-க்கும் மேற்பட்ட மா மரங்களில் கிளைகளை முறித்து சேதப்படுத்தின.
ஊரடங்கு உத்தரவால், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் இருக்கிறோம். வேலைக்கு ஆட்கள் வராததால் மா, தேங்காய்களை பறிக்க முடியாத நிலை உள்ளது.
வழக்கமாக மதியம் 3 மணி வரை விளைபொருட்களை பறித்துக்கொண்டு, அதற்கு மேல் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்வோம். ஆனால், இப்போது மதியத்துக்கு மேல் போலீஸ் கெடுபிடியால் வெளியே எங்கும் செல்ல முடியவில்லை. விவசாயப் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளது.
இந்நிலையில், தென்னை, மா மரங்களை யானைகள் சேதப்படுத்தி, மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தோம்.
அதன்படி, வனத்துறையினர் வந்து பார்த்துவிட்டு, மாலையில் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து காட்டுக்குள் விரட்டுவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதற்கு முன்பு யானைகள் வந்தபோது விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினோம். இப்போது ஊரடங்கு உத்தரவால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.
ஏற்கெனவே நஷ்டத்தில் உள்ள நிலையில், யானைகளால் மேலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு இழப்பீடு வழங்கவும், விவசாய பணிகள் தடையின்றி நடைபெறவும் அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், யானைகள் தொல்லைக்கு நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.