பொதுமக்களின் கவுரவம் மகிழ்ச்சியளிக்கிறது என, தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் 64 ஆயிரத்து 583 நிரந்தர தூய்மைப் பணியாளர்களும், 61 ஆயிரத்து 3 தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையிலும் வேலை செய்து வருகின்றனர்.
நிரந்தரப் பணியாளர்களுக்கு நிகராக ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு நாளொன்று ரூ.270 என மாதம் ரூ.8,100 நிர்ணயிக்கப்பட்டு, பி.எஃப். பிடித்தம், இ.எஸ்.ஐ. பிடித்தம் போக மாதம் ரூ. 6,000 மட்டுமே கையில் ஊதியமாகப் பெறுகின்றனர்.
தற்போது நிலவும் அசாதாரண சூழலில் இவர்களின் பணி கடுமையாக இருந்த போதிலும், தயக்கமின்றி இரவு, பகலாக வீதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுவரும் இவர்களை பொதுமக்கள் பாராட்டிக் கவுரவிக்கின்றனர். இதனால் மகிழ்ச்சியோடு பணியில் அதீத வேகம் காட்டும் தூய்மைப் பணியாளர்கள், அரசின் பாராமுகத்தினால் மனவேதனையை அளிப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் சிலரிடம் பேசியபோது, "விருத்தாசலத்திலிருந்து காலை 6 மணிக்கெல்லாம் வர வேண்டும். இப்போது பேருந்து வசதியில்லாததால், அதிகாலையிலேயே எழுந்து 11 கி.மீ. சைக்கிளில் வருகிறேன்.
பாதுகாப்பாக பணிபுரிய முகக்கவசம், கைகழுவப் பயன்படுத்தும் கிருமிநாசினி, சோப், கையுறைகள் என ஆரம்பத்தில் கொடுத்தார்கள். அதுவும் 2 நாளுக்கு மேல் வரவில்லை. நாங்களே வாங்கிக் கொள்கிறோம். இல்லையென்றால், சில தன்னார்வ அமைப்பினர் வந்து கொடுக்கின்றனர்" என்றனர்.
விருத்தாசலம் நகராட்சியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, "இங்கு மட்டும் இல்லை. எல்லா ஊரிலும் இதுதான் நிலைமை. கரோனா வந்ததிலிருந்து தூய்மைப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறோம். ஆனால், எங்களுக்கு ஒரு மருத்துவ சோதனை கூட செய்யவில்லை.
மேலும், நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு எண்.95 மாஸ்க், எங்களுக்கு நார்மல் மாஸ்க். அதையாவது ஒழுங்காகத் தருகிறார்களா? இல்லையே. தன்னார்வ அமைப்பினர் சிலர் ஒரு டம்ளர் கபசுரக் குடிநீர் கொடுக்கின்றனர். அதுதான் நாங்கள் கண்ட பலன்" என்கின்றனர் ஆதங்கத்தோடு.
தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் நலன் கருதி தன்னுடைய உயிருக்கு என்ன நடந்தாலும், மற்றவர்களுக்கு எந்த நோயும் வந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் பணியாற்றும் எங்களை, அரசு புரிந்துகொண்டு, பணியாளர்களிடம் பாகுபாடு காட்டாமல், ஊக்குவிக்கின்ற வகையில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பதே தூய்மைப் பணியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது தொடர்பாகக் கருத்து அறிய கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கராவைத் தொடர்பு கொண்டபோது, அவர் பேசவில்லை.