கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களை போலீஸார் கைது செய்கின்றனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரியமேடு, ரிப்பன் மாளிகை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள சிக்னல் அருகில் நடைபெற்றது. சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
பின்னர், கரோனா தடுப்புமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாருக்கு முகக்கவசம் மற்றும் திரவ சுத்திகரிப்பான் வழங்கினார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரின் மகனும், தன்னார்வலருமான அருணவ் ரத்தோர், சென்னை பெருநகர காவல்துறைக்கு சுமார் 35,000 லிட்டர் அளவு கொண்ட பழச்சாறு பாக்கெட்டுகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து சென்னை பெருநகரில் பணிபுரியும் போலீஸாருக்கு கரோனா வைரஸ் தொற்றுபரவாமல் தடுக்க மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை காவல் ஆணையர் வழங்கினார். குறிப்பாக காவல் பணியில் உள்ள போலீஸார் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் காவல்துறை கூடுதல் இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், காவல் கூடுதல் ஆணையர்கள் எச்.எம்.ஜெயராம், பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை ஆணையாளர்கள் ஆர்.சுதாகர், ஏ.ஜி.பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.