தமிழகம்

கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் அடக்க நிகழ்வில் பங்கேற்ற 151 பேர் அடையாளம்: ராமநாதபுரம் ஆட்சியர் தகவல்

கி.தனபாலன்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கரோனா தொற்றால் இறந்தவரின் அடக்க நிகழ்வில் பங்கேற்ற 151 பேர் அடையாளம் காணப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறிச் சந்தை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நுழைவுவாயில் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட கிருமி நாசினி தெளிப்பு வாயில்களை ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் நேற்று தொடங்கி வைத்தார்.

உள்ளே செல்லும் மக்கள் இந்த நுழைவுவாயில்கள் வழியாக கைகளை உயர்த்திச் செல்லும்போது கிருமி நாசினி தெளிக்கப்படும்.

பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு வாயில்கள் அமைக்கப்படும்.

தற்போது ராமநாதபுரம் நகராட்சியில் 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதேபால் பரமக்குடி உள்ளிட்ட 3 இடங்களில் அமைக்கப்படும்.

மாவட்டத்தில் இதுவரை 35 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டதில் டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்த 2 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் உயிரிழந்த கீழக்கரை தொழிலதிபர் அடக்க நிகழ்வில் பங்கேற்ற 151 பேர் அடையாளம் காணப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர், அடக்க நிகழ்வில் சடங்குகளைச் செய்த 5 பேரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் பகல் 1 மணிக்கு மேல் வீட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர்த்து, கரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

கிருமி நாசினி தெளிப்பு வாயில் துவக்க நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, அரசு மருத்துவக் கல்லூரி டீன் எம்.அல்லி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பி.வெங்கடாச்சலம், நகராட்சி ஆணையர் என்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT