கரோனோ தடுப்பில் பிரதமர், முதல்வரின் நடவடிக்கைகளை கேலி பேசுவோர் சமூக விரோதிகள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தேரடி வீதியில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி நுழைவுவாயில் கூடத்தை பார்வையிட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர், "விருதுநகர் மாவட்டத்தில் கரோனோ சமூகப் பரவலைத் தடுக்க தீவிரமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கரோனோ பரவலைத் தடுக்க பொதுமக்கள் போதுமான ஒத்துழைப்பைத் தருகிறார்கள். சுகாதாரத் துறை, காவல்துறை வருவாய்த்துறை போன்ற பல்வேறு துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் போற்றத்தக்க வகையில் உள்ளது.
வல்லரசு நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கரோனோ கட்டுப்பாட்டில் உள்ளதற்குக் காரணம் மத்திய அரசு எடுத்த தீவிர நடவடிக்கையே.தேசியத்தையும் தெய்வீகத்தையும் உலகிற்கு பறைசாற்றி அரசியல் நடத்திய முத்துராமலிங்கத்தின் வழியில் பிரதமர் மோடி தெய்வீக வழியில் தேசிய உணர்வை ஊட்டுகிறார்.
கரோனோ தடுப்பில் பிரதமர் மற்றும் முதல்வரின் நடவடிக்கைகளை கேலி கிண்டல் பேசுவோர் சமூக விரோதிகள். நாட்டிற்கு உதவி செய்யாதவர்கள் தான் குறை சொல்வார்கள். திண்ணையில் அமர்ந்து வெட்டிப்பேச்சு பேசுபவர்களின் பேச்சை கண்டு கொள்ளாமல் நமது சமூகப் பணியை விடாமல் மேற்கொண்டால் கரோனோ பாதிப்பிலிருந்து இந்தியா மீட்கப்படும்" என்றார்.
ஊடரங்கு குறித்த கமல்ஹாசன் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, "குற்றம் சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். குற்றம் சொல்பவர்கள் நிச்சயம் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். குற்றம் சொல்லும் தாங்கள் நாட்டிற்கு என்ன செய்துள்ளோம் என்பதை சிந்திப்பவர்கள் குறை சொல்ல மாட்டார்கள்.
கரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் ஒத்துழைப்பு சிறந்த முறையில் உள்ளது. ஆரம்பத்தில் சற்று கடினமாகப் பார்த்தாலும் தற்பொழுது நமக்காகத்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் புரிந்து செயல்படுகிறார்கள்.
பிரதமரின் அறிவுறுதலின் படி ஒற்றுமை ஒளி ஏற்றியதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமை உலகிற்கு பறைசாற்றபட்டுள்ளது. உலக நாடுகளில் இதுபோன்ற நேரங்களில் தங்களை சரியான முடிவு எடுக்கக் கூடியவர்கள் என நிரூபிக்க முடியவில்லை. ஆனால் இந்தியா அதனை நிரூபித்துக் காட்டியுள்ளது. இதற்கு. காரணம் இந்தியாவில் பதவியில் உள்ள தலைவர்களின் கடுமையான உழைப்பு மற்றும் நேர்மையான நடவடிக்கையே. ஊரடங்கு நீட்டிப்பது குறித்து அரசு தான் முடிவெடுக்கும்" என்று பேசினார்.