மதுரை மல்லிகையை சென்ட் தொழிற்சாலைக்கும், வெளிநாட்டிற்கு அனுப்பவும் மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் சிறப்பு அனுமதி அளித்ததால் 1,500 விவசாயிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மல்லிகைப் பூ சாகுபடியில் 1,500க்கும் அதிகமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தினசரி 10 ஆயிரம் கிலோ பூ மதுரை மார்க்கெட்டிற்கு வரும்.
பொதுமக்கள் தேவைக்குப் போக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். விலை மிக மலிவாகும்போது சென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும். கரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பல தொழில்களை முடக்கிவிட்டது.
கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் மல்லிகைப் பூக்கள் செடியிலிருந்து பறிக்காமலேயே அழுகின. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என்.ஜெகதீசன் மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் கவனத்திற்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து ஆட்சியர் சிறப்பு அனுமதி அளித்தார்.
என்.ஜெகதீசன்
இதுகுறித்து என்.ஜெகதீசன் கூறுகையில், ''மதுரை மல்லிகையை கோயம்புத்தூரில் உள்ள சென்ட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல ஆட்சியர் உடனே அனுமதி அளித்தார். அங்கு தினசரி 1,500 கிலோ செல்கிறது. வேறு சில ஆலைகளுக்கு 3000 கிலோ அனுப்பப்படுகிறது.
தினசரி சென்னை - துபாய் இடையே சரக்கு விமானத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் மல்லிகைப் பூவை ஏற்றுமதி செய்ய தோட்டக்கலைத்துறை இயக்குநர் மூலம் ஆட்சியர் அனுமதி பெற்றுத் தந்துள்ளார்.
இன்று (ஏப்.7) முதல் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆட்சியரின் இந்த நடவடிக்கையால் 1,500 விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுள்ளதால் அவர்கள் அனைவரும் நன்றி தெரிவித்துள்ளனர். இல்லையெனில் செடியிலேயே பூக்கள் அழுகிவிடுவதைத் தவிர வேறு வழியில்லை'' என்றார்.
ஆட்சியர் வினய் கூறுகையில், ''விவசாயப் பணிகள் தடையின்றி நடக்க ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு உதவ துரித நடவடிக்கை எடுத்து அனுமதி பெற்றுத்தரப்பட்டது'' என்றார்.