திருவாரூர் நகராட்சி நிர்வாகம் சார்பில், பழைய பேருந்து நிலை யத்தில் அமைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி தெளிப்பு சுரங்கப் பாதையை நேற்று திறந்து வைத்த தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
திருவாரூர் மாவட்டத்தில் 2,261 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இது தவிர கரோனா அச்சுறுத்தல் உள்ள பகுதிகளைச் சேர்ந்த 9,053 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 79.48 சதவீதம் பேருக்கு நிவாரண உதவித் தொகையான ரூ.1,000 மற்றும் டோக்கன் வழங்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ளவர்களுக்கு நாளை (இன்று) உதவித் தொகை வழங்கப் பட்டுவிடும். இதைத்தொடர்ந்து, அரிசி, பருப்பு உள்ளிட்ட இலவச பொருட்கள் வழங்கப் படும்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.