முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அடுத்த நான்கு நாட்களுக்கு உயர் நீதிமன்றம் 15 நிமிடங்கள் கூடுதலாக செயல்படும் என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அறிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவையொட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல் நூலக கட்டிட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பேசியதாவது:
சாமானியராகப் பிறந்து சாதனை படைத்தவர் அப்துல் கலாம். அவரைப் பற்றிய நிகழ்ச்சியொன்றை தொலைக்காட்சியில் பார்த்தேன். அப்போது, உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் எது என்று அப்துல் கலாமிடம் கேட்டபோது, “ஒரு சிறுமி நான்கு கிலோ எடை கொண்ட செயற்கைக் காலை பொருத்தி சிரமப்பட்டு நடந்ததை கண்டேன். புதிய தொழில்நுட்பத்தில் 400 கிராம் எடைகொண்ட செயற்கைக் காலை உருவாக்கிக் கொடுத்தேன். அப்போது அந்த சிறுமியும், அவரது பெற்றோரும் அடைந்த மகிழ்ச்சியே எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம்” என்று குறிப்பிட்டார். அவரது மனிதநேயத்தை அப்போது காணமுடிந்தது.
கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அப்துல் கலாம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “வழக்கு தொடரும் பொதுமக்கள் நீதித்துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பாதுகாக்க வேண்டியது இப்போதைய தேவையாக இருக்கிறது. இங்கு சிறப்பாக செயல்படும் சமரச மையத்தின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது” என்றார்.
செய்யும் தொழிலே தெய்வம் என்றார் கலாம். அதனை மனதில் கொண்டு இந்த நீதிமன்றம் இந்த வாரத்தில் மீதியுள்ள நான்கு நாட் களும் கூடுதலாக 15 நிமிடங்கள் செயல் படும். இவ்வாறு அவர் பேசினார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த இரங்கல் செய்தியை அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பதிவுத்துறைக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கலாமுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.