அனைத்து தனியார் மருத்துவமனைகளும் வழக்கமாக செயல்படுவதுபோல் தொடர்ந்து செயல்பட வேண்டும். உள் நோயாளிகள், வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை தங்குதடையின்றி வழங்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்து பேசியதாவது:
அனைத்து தனியார் மருத்துவமனைகளும் வழக்கமாக செயல்படுவதுபோல் தொடர்ந்து செயல்பட வேண்டும். உள் நோயாளிகள், வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை தங்குதடையின்றி வழங்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள், சிகிச்சைகள் தொடர்ந்து தனிக்கவனத்துடன் அளிக்கப்பட வேண்டும். டயாலிலிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு எவ்வித சுணக்கமும் இன்றி சிகிச்சை தொடர்ந்து நடைபெற வேண்டும்.
தொற்றா நோய் சிகிச்சை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும். கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை உட்பட அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், நலப்பணிகள் இணை இயக்குநர் முருகவேல், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ராஜா மற்றும் இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.