கடந்த வாரம் கோவை, ரத்தினபுரியில் உள்ள முத்துவிலாஸ் பேக்கரி நிர்வாகி, விற்பனையாளர்கள் யாரும் இல்லாமலே கடைக்கு வெளியே பிரெட் பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்தார். அங்கு வந்த மக்கள் தங்களுக்குத் தேவையான பிரெட்டுகளை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை அங்கிருந்த டப்பாவில் நாணயத்துடன் வைத்துச் சென்றார்கள்.
இதேபோல், ஒரு கடையை தற்போது மயிலாடுதுறையிலும் திறந்திருக்கிறார்கள். இந்தக் கடையைத் திறந்திருப்பவர் மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவர் ஜனார்தனன்.
கரோனா தொற்று நோய் பாதிப்பு பயம் காரணமாக அத்தியாவசியப் பொருள் விற்பனைக் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பலருக்கும் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில் இந்த நேர்மைக் கடை திறக்கப் பட்டுள்ளது என்கிறார் ஜனார்தனன்.
மயிலாடுதுறை, கூறைநாடு பகுதியில் உள்ள இவரது ‘ஆர்.ஆர். கேக் கார்னர்’ கடையின் முன்பு இந்த பிரெட் கடை இயங்குகிறது. கடையின் முன்பாக பிரெட் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒரு பிரெட் பாக்கெட்டின் விலை 30 ரூபாய் எனவும், அதற்குரிய பணத்தை அருகில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் வைத்துவிட்டு தங்களுக்குத் தேவையான பாக்கெட்டுகளை எடுத்துச் செல்லலாம் எனவும் அங்கு எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. பிரெட்டை எடுத்துக் கொடுக்கவோ அதற்கான காசை வசூலிக்கவோ கடையில் சிப்பந்திகள் யாரும் இல்லை.
கடைக்கு வரும் பொதுமக்கள் ரூபாயை சரியாக எண்ணி வைத்துவிட்டு தங்களுக்குத் தேவையான பிரெட் பாக்கெட்டுகளை எடுத்துச் செல்கின்றனர். "காலை ஆறரை மணி முதல் பிரெட் பாக்கெட்டுகளை வைக்கிறோம். பாக்கெட்டுகள் தீர்ந்தவுடன், அங்கு எழுதி வைக்கப்பட்டுள்ள செல்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடனடியாக எங்கள் பணியாளர் மூலம் கூடுதல் பாக்கெட்டுகள் வைக்கப்படுகின்றன. 24 மணிநேரமும் யாரும் பசியோடு இருக்க வேண்டாம் என்பதுதான் எங்கள் நோக்கம்" என்கிறார் இந்த நேர்மைக் கடையைத் திறந்திருக்கும் ஜனார்தனன்.