தமிழகம்

மதுரையில் 80 லாரி நெல் மூட்டைகள் தேக்கம்: கரோனாவால் கூலி ஆட்கள் வேலைக்கு வராததால் பாழாகும் அவலம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

கரோனா பரவும் அச்சத்தால் கூலி ஆட்கள் வேலைக்கு வராததால் மதுரையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுப்ப வேண்டிய 80 லாரி நெல் மூட்டைகள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், அதனை பொதுவிநியோகத் திட்டத்திற்காக ஆங்காங்கே உள்ள திறந்த வெளி குடோனுக்கு அனுப்பி வைக்கும்.

மதுரையில் கடந்த மாதம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த 80 லாரிகளில் உள்ள நெல்மூட்டைகள் திருமங்கலம் ஆஸ்டின்பட்டியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக திறந்த வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதனை இறக்கி திறந்த வெளி குடோனில் அடுக்கி வைத்து தார்பாய் போடுவதற்கு கூலி ஆட்கள் வரவில்லை.

தற்போது ‘கரோனா’ வைரஸ் வேகமாக பரவுவதால் அத்தியாவசிய பணிகளுக்கு கூட கூலி ஆட்களுக்கு வேலை கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது.

அதனால், நெல் மூட்டைகள் இறக்கி அடுக்கி வைக்க ஆட்கள் இல்லாததால்கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக 80 லாரிகளில் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள், மதுரை அருகே திருமங்கலம் ஆஸ்டின்பட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘திறந்த வெளி குடோனில் சவுக்கு மரத்தை 3 அடி வரை அடுக்கி அதற்கு மேலேதான் இந்த நெல் மூட்டைகள் அடுக்கி அதன் மேலே போர்வைபோட்டு பாதுகாப்பாக மூடி வைக்கப்படும்.

தற்போது மரக்கடைகள் திறக்கப்படாததால் சவுக்கு மரம் கிடைக்கவில்லை. கூலி ஆட்களும் வராததால் நெல் மூட்டைகள் பாதுகாப்பு இல்லாமல் திறந்த வெளியில் மழையிலும், வெயிலிலும் பாழாகி வருகின்றன, ’’ என்றார்.

SCROLL FOR NEXT