அரியாங்குப்பத்திலிருந்து வெளியேறிய மக்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள், தமக்கும் பரவிவிடுமோ என்ற அச்சத்தில், உறவினர்கள் வீடுகள் என்று படையெடுத்து வருகின்றனர். இதனிடையே, மாநிலம் விட்டு வேறு மாநிலத்திற்கும் தற்போது பொதுமக்கள் இடம்பெயரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் அருகாமை மாநிலமான புதுச்சேரி அரியாங்குப்பத்தில் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பதை கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாநில சுகாதாரத்துறை உறுதி செய்தது. இதனால், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த மூன்று கிலோ மீட்டரைச் சுற்றி அனைத்துத் தெருக்களும், அரியாங்குப்பத்தை சுற்றி சீல் வைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வீடு தேடிச் சென்று வழங்கப்படுகின்றன.
இதனிடையே, கரோனா தொற்று பீதியால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பலர் வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனர். குறிப்பாக அருகிலுள்ள தமிழகத்தில் உள்ள உறவினர் வீடுகளுக்கு நடந்து வந்து தஞ்சமடைகின்றனர்.
நேற்று முன்தினம் அரியாங்குப்பம் பகுதியிலிருந்து நடந்து வந்த சிலர் விழுப்புரம் அருகே பெரியகுச்சிப்பாளையம் கிராமத்தில் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இரு நாட்களாக வெளியே வராத நிலையில் அவர்களுக்கு காய்ச்சல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து சுகாதாரத்துறைக்கும், கட்டுப்பாட்டு அறை எண் 1077-ஐ தொடர்புகொண்டு தெரிவித்துள்ளனர்.
உரிய நடவடிக்கையில்லாத நிலையில், ஆட்சியரின் செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டும் தெரிவித்துள்ளனர். உடனடியாக்க மருத்துவக் குழுவை அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியதாக கூறப்படுகிறது.