தமிழகம்

அறிகுறி இல்லாதவர்களுக்கு கரோனா வந்ததால் அதிர்ச்சி: வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 90,824 பேருக்கு பரிசோதனை செய்ய முடிவு- சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

நோய் அறிகுறியே இல்லாதவர்களுக்கு ‘கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டதால் அதிர்ச்சியடைந்த தமிழக அரசு வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 90,824 பேருக்கு உடனடியாக ‘கரோனா’ பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று மாலை 571 பேருக்கு ‘கரோனா’ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனளிக்காமல் உயிர் பலியும் தொடங்கியுள்ளது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 90,824 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

127 பேர், அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு இதுவரை எந்த நோய் அறிகுறியும் தென்படவில்லை.

அதனால், சுகாதாரத்துறை இவர்களுக்கு ‘கரோனா’ ரத்தப்பரிசோதனை செய்யாமல் இருந்து வந்தது. ஆனால், டெல்லி நிகழ்வுக்குச் சென்று வந்தவர்கள் அனைவருக்கும் சுகாதாரத்துறை ‘கரோனா’ பரிசோதனை செய்ததில் சிலருக்கு நோய் அறிகுறியே இல்லாவிட்டாலும் ‘கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதனால், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 90,824 பேருக்கும் தற்போது நோய் அறிகுறி இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ‘கரோனா’ பரிசோதனை செய்வதற்கு தமிழக அரசு சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாது:

முதலமைச்சர் கே.பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை இணை மற்றும் துணை இயக்குனர்கள், அரசு மருத்துவக்கல்லூரி ‘டீன்’களிடம் கலந்துரையாடினார்.

அப்போது, நோய் அறிகுறியே இல்லாதவர்களுக்கு கூட ‘கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். உடனே முதலமைச்சர் கே.பழனிசாமி, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நோய் அறிகுறியே இல்லாதவர்கள் அனைவருக்குமே ‘கரோனா’ பரிசோதனை செய்வதற்குஉத்தரவிட்டார்.

‘கரோனா’ வைரஸ் நோயை பொறுத்தவரையில் ஒவ்வொரு நாளும் புதுஅனுபவங்கள் மருத்துவர்களுக்கு கிடைக்கிறது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்வர்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொலைபேசியிலே நோய் அறிகுறி இருக்கிறதா? என விசாரிக்கின்றனர். அவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே ‘கரோனா’பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது நோய் அறிகுறியே இல்லாதவர்களுக்கு கூட இந்த நோய் உடலில் இருக்க வாய்ப்புள்ளது.

அதனாலேயே, அரசு தனிமைப்படுத்தியவர்களை முதற்கட்டமாக ‘கரோனா’ பரிசோதனைக்கு உட்படுத்திவிட்டு அடுத்தக்கட்டமாக தேவைப்பட்டால் அமெரிக்கா போல் அனைத்து மக்களுக்கு இந்தப் பரிசாதனையை விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது, ’’ என்றனர்.

SCROLL FOR NEXT