கரோனா ஊரடங்கு காலத்தில் பணி நெருக்கடி அதிகமாக இருப்பதால், மொத்த எண்ணிக்கை அடிப்படையில் மூன்று குழுவாகப் பிரித்து 8 மணி நேரப்பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காவல்துறையில் அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. உத்தரவை அமல்படுத்த போலீஸார் இரவு, பகல் என, தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அத்தியாவ சியம் தவிர்த்து, தேவையின்றி வெளியில் வருவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சமூக விலகல், முகக்கவசம், கை சுத்தம் செய்தல் போன்ற விழிப்புணர்வுகளை போலீஸார் ஏற்படுத்துகின்றனர். மேலும், சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க உதவுகின்றனர். இது போன்ற போலீஸாரின் தொடர் பணியால் தங்களது குடும் பத்தினரை கவனிக்க முடியாத சூழல் இருந்தது.
காவல் துறையினர், அவர்களது குடும்பத்தினர் நலன் கருதி ஊரடங்கு அமல் காலத்தில் தினமும் 8 மணி நேரம் பணி என்ற திட்டத்தை டிஜிபி அறிவித்தார்.
அனைத்து மாவட்டத்திலும் காவல்துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் கடந்த 1-ம் தேதி முதல் ஏ,பி,சி என, 3 குழுவாக பிரித்து பணி வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும், மதுரை உட்பட சில மாவட்டத்தில் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸாரின் எண்ணிக்கை அடிப்படையில் ஏ,பி,சி, என, பிரித்து பணி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதன்படி, ஒவ்வொரு16 மணி நேரத்துக்கு பிறகும் மீண்டும் பணிக்குத் திருப்பவேண்டும். மதுரையில் திருமங்கலம், நத்தம், கொட்டாம்பட்டி போன்ற தூரத்திலுள்ள போலீஸாருக்கு சிரமம் உள்ளதாகவும், பயணத்துக்கென சில மணிநேரத்தை செலவிடுகிறோம் எனவும் கூறுகின்றனர்.
மொத்த எண்ணிக்கையில் 3-ல் ஒரு பகுதியினருக்கு ஏ,பி,சி என, பணி ஒதுக்கீடும்போது, முதல் குழுவினர் ஓரிரு நாள் வரை பணிபுரிவர். அடுத்தடுத்த குழுவினருக்கு 2 அல்லது 3 நாள் முழு விடுமுறை கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம். டிஜிபியின் இந்த உத்தரவை அதிகாரிகள் பரிசீலிக்கவேண்டும் என, கோரியுள்ளனர்.
இது குறித்து போலீஸார் சிலர் கூறுகையில், ‘‘கரோனா தடுப்பு பணியில் இருந்து வீட்டுக்கு சென்றால், தனிமையில் இருக்கும் சூழல் உள்ளது. காவல் நிலைய எண்ணிக்கை அடிப்படையில் பணி வழங்காமல், மொத்த போலீஸார் எண்ணிக்கையில் 3 குழுவாக பிரித்து பணி வழங்கினால் குடும்பத்தினருடனும், தங்களது உடல் நிலையையும் பாதுகாக்கலாம். தொடர் பணியால் மன உளைச்சல் ஏற்பட்டு, எங்களது கோபம் மக்கள் மீது பாயும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. டிஜிபியின் உத்தரவுபடி ஓரிரு நாள் விடுப்பு கிடைக்க பணி ஒதுக்கவேண்டும்,’’ என்றனர்.
காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ சில இடங்களில் காவல் நிலைய எண்ணிக்கை அடிப்படையில் பணி ஒதுக்கும் அவசியம் உள்ளது.
குறிப்பாக மகளிர் போலீஸாருக்கு இரவில் பணி ஒதுக்க முடியாது.எப்படிப் பார்த்தாலும் 24 மணி நேரத்தில் ஒருவருக்கு சுழற்சி முறையில் 8 மணி நேரப்பணி மட்டுமே.
தூரத்தில் இருப்பவர்கள் குறைவு. சிலர் தங்களது வசிப்பிடம் அருகில் பணி செய்யவே விரும்புகின்றனர். காவல்துறையில் எப்படி முடியும். வேறு வழியில்லை. கொஞ்ச நாளுக்கு சமாளிக்கவேண்டும்,’’ என்றார்.